3000 முத்தங்களுடன் ஸ்டாலின் புகைப்படம்.....! பாராட்டும் நெட்டிசன்கள்....!
- IndiaGlitz, [Monday,July 19 2021]
பெரம்பலூர் மாவட்டத்தில், வாலிகண்டபுரம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் ராமச்சந்திரன். இவருடைய மகன் நரசிம்மன் (20), கோவையில் உள்ள ரங்கநாதன் ஆர்கிடெக்சர் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.
சிறுவயதிலிருந்தே நரசிம்மனுக்கு ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. பள்ளியிலிருந்தே பலவகையான வித்தியாசமான ஓவியங்கள், இயற்கை காட்சிகள், பறவையினங்கள், விலங்குகள் போன்றவற்றை, ஓவியமாக வரைவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நரசிம்மன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவரது ஊரான வாலிகண்டபுரத்தில் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலின் முன் 16 அடி உயரம், 8.5.அடி அகலம் உடைய துணியை வைத்து, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் வரைபடத்தை வரைந்துள்ளார். ஆனால் இந்த ஓவியம் வித்தியாசமானதாகும், பாத்திரம் ஒன்றில் வண்ண சாயத்தை வைத்து, அதை உதடுகளால் எடுத்து, துணியில் முத்தமிட்டு இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். அதுவும் 3000 முறை முத்தமிட்டு, இந்த ஓவியத்தை நிறைவு செய்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கும், தனது படைப்பை அனுப்பியுள்ளார். கெமிக்கல் கலக்காத'பிக் அப்' என்ற பெயிண்ட் வகையைத் தான் இதில் பயன்படுத்தியுள்ளார்.
இதேபோல் தஞ்சை பெரிய கோயில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்ட ஓவியங்களை, தன் மூக்கினால் வண்ணத்தை தொட்டு வரைந்துள்ளார். மாணவரின் கலைத்திறமையை பாராட்டி, பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் இவருக்கு பரிசு வழங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.