துள்ளிக்குதிக்கும் ஆப்கன் குழந்தை… கண்ணீரால் நனையும் நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,August 28 2021]

தாலிபான்களுக்கு பயந்த பல ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது கிடைக்கும் விமானங்களில் ஏறி வேறுநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது பெல்ஜியம் மிலிட்டரி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறுமி ஒருவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

தாலிபான்களின் ஆட்சியை ஏற்கனவே கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அனுபவித்த ஆப்கன் மக்கள் அவர்கள் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் நாட்டைவிட்டே தப்பித்துவிட வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் அமெரிக்கா, ஜெர்மன், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்களில் ஏறி உலகம் முழுவதும் அகதிகளாக தஞ்சம் புகுந்துவருகின்றனர்.

அந்த வகையில் பெல்ஜியம் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறுமி ஒருவர் தன்னுடைய தாய், தந்தை, சகோதரி ஆகிய அனைவரும் முன்னே செல்ல, “தான் சிறையை விட்டு தப்பித்துவிட்டேன் என நினைத்தாரோ? என்னவோ?“ மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து விளையாடுகிறார். இந்தக் காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது.

கூடவே இதுபோன்ற மகிழ்ச்சியை உணரமுடியாத பல ஆயிரக்கணக்கான ஆப்கன் சிறுமிகளை நினைத்து கடும் துயரமும் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் வைரலான இந்தப் புகைப்படத்திற்கு பெல்ஜியம் பிரதமர், “அகதிகளை பாதுகாக்கும்போது இதுதான் நடக்கும். அந்தச் சிறுமியை பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம்” என வாழ்த்துத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.