கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு… அறிவிப்பு வெளியிட்ட சீரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்து 45 வயதிற்கு மேல் உள்ளவர்களில் இணைநோய் உள்ளவர்களுக்கும் அடுத்து 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் எனத் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் வரும் மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை ஒட்டி தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் முதலில் ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறித்தி உள்ளது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியின் விலையால் மாநில அரசுகளின் பணச்சுமை அதிகரிக்கும் எனவும் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களுக்கு சீரம் மருந்து நிறுவனம் வழங்கும் கொரோனா தடுப்பூசி விலையை ரூ.400 இல் இருந்து 100 ரூபாயைக் குறைத்துக் கொள்வதாக சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனாவாலா தெரிவித்து உள்ளார். மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார்.
முதலில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து மத்திய அரசுக்கு ரூ.150 க்கு விலைக்கு விற்று வந்தது. அதைத் தொடர்ந்து மாநில அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கொடுப்பதற்கான செயல்திட்டத்தில் மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 க்கும் வழங்கி வந்தது. இதில் மாநில அரசுகளுக்கு வழங்கும் விலை அதிகமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த விமர்சனத்தை அடுத்து சீரம் தனது விலையில் இருந்து 100 ரூபாயைக் குறைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய கண்டுபிடிப்பான கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் மாநில அரசுக்கு ரூ.600 க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200க்கும் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout