தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்மை குறையுமா? தொடரும் சந்தேகத்திற்கு பதில்!
- IndiaGlitz, [Saturday,June 19 2021]
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஆண்மை குறைபாடோ அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கையில் மாற்றமோ ஏற்படாது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறோம். இதற்கு ஒரே தீர்வாக கொரோனா தடுப்பூசி மட்டுமே நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த எதிர்மறையான சந்தேகங்களை சிலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஃபைசர், மாடர்னா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும்போது ஆண்மை குறையும் எனவும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் வதந்தி கிளம்பியது.
இதையடுத்து அமெரிக்க விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளைத் தற்போது JAMA ஆய்விதழில் வெளியிட்டு உள்ளனர். அந்த முடிவில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாது எனவும் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த ஆய்விற்காக 18-50 வயது வரையுள்ள தன்னார்வலர்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களின் விந்தணுக்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசியை மக்கள் எந்த பயமும் இல்லாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.