வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை! கண்ணீர் வடிக்கும் வாகன ஓட்டிகள்!
- IndiaGlitz, [Friday,January 22 2021]
சாமானிய மக்களின் அன்றாட தேவையில் ஒன்றாகவே பெட்ரோல், டீசல் போன்ற கச்சாப் பொருட்கள் மாறிவிட்டன. அதுவும் பொதுப் போக்குவரத்து இல்லாத கொரோனா காலத்தில் பெட்ரோலின் பயன்பாடு சாமானிய மக்களின் மத்தியில் அதிகரித்து விட்டது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பெட்ரோல்-டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை சந்தித்து உள்ளன. டெல்லியில் இன்று பெட்ரோல்-டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு மீண்டும் 25 பைசா உயர்த்தி உள்ளன. இதனால் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.85.45 காசாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசலின் விலை ரூ.75.63 காசாக அதிகரித்து உள்ளது.
மும்பையில் இந்த அளவைவிட உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.92.04 காசாக விற்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களில் 3 ஆவது முறையாக பெட்ரோல் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 18 ஆம் தேதி லிட்டருக்கு 25 காசு உயர்த்தப்பட்டு தற்போது மீண்டும் டெல்லியில் ஒரு லிட்டருக்கு 25 காசு வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை ஏற்றத்தால் கடந்த வாரம் டெல்லியில் ரூ.84.95 காசுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 85.45 காசாக உயர்ந்து இருக்கிறது.
மேலும் மும்பையில் இந்த விலை ஏற்றத்தினால் ரூ.1.56 காசு அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.92.04 காசாக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87.85 காசாகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.87.67 காசாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்றைய விலையை விட 22 காசுகள் உயர்ந்து இன்று ரூ.88.07 காசாக அதிகரித்து உள்ளது. அதேபோல டீசல் 23 காசுகள் உயர்ந்து ரூ.80.90 காசாக விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.