சென்னையில் வரலாறு காணாத விலையுயர்வில் பெட்ரோல்-டீசல்
- IndiaGlitz, [Monday,April 02 2018]
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் வரலாறு காணாத வகையில் இன்று பெட்ரோல் விலை ரூ.76.59 ஆகவும், டீசலின் விலை ரூ.68.12ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் போக்குவரத்து செலவு காரணமாக இன்னும் விலை அதிகம் இருக்கும். கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் 87 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு ஆண்டாக நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இருப்பினும் தெற்காசிய நாடுகளிலேயே டீசல், பெட்ரோலுக்கு அதிகமான வரிவிதிக்கும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொருத்து ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதமிருமுறை என மாற்றப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டது. தினசரி விலைமாற்ற முறை வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை மாதம் ஒருமுறை, மாதமிருமுறை உயர்ந்ததை காட்டிலும் அதிகம் உயர்ந்துள்ளது என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.