சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
- IndiaGlitz, [Tuesday,February 07 2017]
தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் முதல்வர் பதவியை ஏற்பது தார்மீக அடிப்படையில் முறையானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் உள்பட பலர் பேட்டியளித்தும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் இன்று காலை அறிவித்தது. சசிகலா நாளை பதவியேற்று அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் மீண்டும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்பதே அனைவரது கவலையாக உள்ளது.
இந்நிலையில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த சிவ இளங்கோ மற்றும் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் சசிகலா முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.