ஜல்லிக்கட்டில் மிருக வதைக்கான ஆதாரம். அடங்க மறுக்கும் பீட்டா
- IndiaGlitz, [Tuesday,February 21 2017]
சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்ற போதிலும் மத்திய மாநில அரசுகள் பிரத்யேக சட்டம் இயற்றியதால் இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இனி அடுத்தடுத்த வருடங்களிலும் இந்த ஆண்டை போலவே ஜல்லிக்கட்டு எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருவதாக பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார். இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது என்றும், மிருகவதை குறித்த ஆதாரங்களை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்றும் பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.
பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான விலங்குகள் உணவுக்காக கொல்லப்படுவதற்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் விலங்குகள் காப்பாற்றப்படுவதோடு, அனைவரையும் சைவ உணவுக்கு மாற்றிய புண்ணியமும் கிடைக்கும். அதை விட்டுவிட்டு மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் பீட்டாவை நாட்டைவிட்டு துரத்தும் பணியில் நம் இளைஞர்கள் இறங்குவார்கள் என்பது உறுதி