தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து பீட்டா சுப்ரீம் கோர்ட்டில் மனு

  • IndiaGlitz, [Wednesday,January 25 2017]

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு இந்த பிரச்சனையில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து மத்திய அரசின் ஆதரவோடு அவசர சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் நேற்று முன்தினம் சிறப்பு தமிழக சட்டமன்ற கூட்டத்தில் மசோதாவாக அனைத்து உறுப்பினர்களின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடத்த எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்தை எதிர்த்து, பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. பிப்ரவரி 1, 2, மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் ஏற்கனவே இதுகுறித்த வழக்கு ஒன்றின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் விரைவில் அளிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.