பீட்டாவுக்கு தமிழக அரசு தடை. வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்கிறது மத்திய அரசு
- IndiaGlitz, [Saturday,January 21 2017]
பீட்டா என்ற அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நாளை வெகுசிறப்பாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பீட்டாவுக்கே தமிழக அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்றது. ஆனால் தற்போது அந்த தடை அவசர சட்டத்தின் மூலம் உடைக்கப்பட்டது. இந்நிலையில் பீட்டா அமைப்புக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது மட்டுமின்றி இந்த அமைப்பின் வரவு செலவு கணக்கை சரிபார்க்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வுக்குப் பின்னர் பீட்டா அமைப்பு மீது மத்திய அரசும் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மெரீனா போராட்டக்காரர்கள் முழங்கியபடி பீட்டாவுக்கு டாட்டா காட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பீட்டா அமைப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.