சாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,March 04 2021]
பெரு நாட்டில் நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவர் தான் இறக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளார். அந்நாட்டு சட்டப்படி கருணைக் கொலை செய்வது குற்றமாகும் என்பதால் இந்த வழக்கின் வெற்றி புது திருப்பமாகப் பார்க்கப் படுகிறது.
அனா எஸ்ட்ராடா எனும் 44 வயதே ஆன பெண் ஒருவர் பல ஆண்டு காலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இனி உடல்நலம் பெறுவதில் நம்பிக்கையே இல்லாத அந்தப் பெண்மணி கருணைக் கொலை செய்துவிடுமாறு மருத்துவர்களிடம் கோரி உள்ளார். ஆனால் சட்டப்படி இது குற்றமாகும் என்பதால் மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அப்பெண், தான் கருணை கொலை செய்யப்படுவதை அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “கண்ணியமான மரணத்திற்கு உரிமை உண்டு” என தீர்ப்பு அளித்து உள்ளனர். இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அந்நாட்டு அரசாங்கமும் இப்பெண்ணின் கருணைக் கொலை உத்தரவுக்கு இசைவு அளித்து உள்ளது. இதையடுத்து கருணைக் கொலை தீர்ப்பு பெரு நாட்டில் புது திருப்பமாக அமையும் எனப் பலரும் கருதி வருகின்றனர்.