வெங்காயம் திருடிய நபர்.. கட்டி வைத்து அடித்த வியாபாரிகள்.
- IndiaGlitz, [Saturday,December 07 2019]
புதுச்சேரியில் உள்ள சந்தையில் வெங்காயம் திருடிய நபரை அடித்து உதைத்து போலீசில் வியாபாரிகள் ஒப்படைத்தனர்.
குபேர் மார்க்கெட் என்கிற பெரிய மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட மூட்டைகள் அடிக்கடி திருடு போனதால் திருடனை பிடிக்க வியாபாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் சந்தையில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் வெங்காய மூட்டைகளை எடுத்துச் சென்ற முத்தரையர் பாளையத்தை சேர்ந்த காந்திலாலை கையும் களவுமாக பிடித்தனர்.அப்போது அவர், அடிக்கடி இதேபோல் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், அவரை கட்டி வைத்து தாக்கினர். பின்னர் பெரியகடை காவல் நிலையத்தில் காந்திலாலை ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. சிறிய வெங்காயம் கிலோ 170 ரூபாய் வரை விற்பனையாகிறது. துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெங்காய தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவுகிறது. ஆங்காங்கே இது போல வெங்காய திருட்டுக்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.