நிரந்தர Work from Home வேலைக்கு ஆகாது!!! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO கருத்து!!!

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில மாதங்கள் உலகமே முடங்கி கிடந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப ஜம்பவான்களான பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து வேலைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் கொரோனா பரவல் குறைந்த பாடில்லை. இந்நிலையில் எப்போது கொரோனா ஊரடங்கு முடியும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் எழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த முடியாது, கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது போன்ற கருத்துகளையும் அதிகாரிகள் சொல்லத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் சற்று அகலக்கால் வைத்து, தங்களது பணியாளர்களை “நிரந்தரமாக வீட்டில் இருந்து, வேண்டுமானாலும் பணி செய்து கொள்ளுங்கள்” என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரியான ஜாக் டார்சி நிர்வகிக்கும் இன்னொரு நிறுவனமான square நிறுவனத்திற்கும் இதே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து, நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, “நிரந்த Work from home என்பது பணியாளர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அவர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றுவது நல்லதல்ல” என்று கருத்துத் தெரிவித்து உள்ளார். மேலும், “பணியிடங்களில் ஒருவருக்கு ஒருவர் பழகும் தன்மையில் இருந்து அவர்கள் விலக்கப் படுவதார்கள். கூட்டுணர்வு புரிதலுடன் வேலை பார்க்கும் அனுபவம் இல்லாமல் போய்விடும். இதனால் மற்றவர்களிடம் எப்படி பழகுவது என்பது போன்ற அடிப்படைகளும் தெரியாது. அவர்கள் சமூகத் தொடர்பில் இருந்து அவர்கள் விலக்கப்படுவார்கள். இது போன்ற பிரச்சனைகளால் வீட்டில் இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்காது” எனத் தெரிவித்து உள்ளார். அதோடு வீடியோ கான்பிரஸ் போன்ற செயல்பாடுகளால் முழுமையான புரிந்துணர்வும் ஏற்படாது. அது நேரில் இருந்து கற்றுக் கொள்வது போன்ற உணர்வை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.