எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு- பதற வைக்கும் மத்திய அரசின் சுற்றறிக்கை!!!

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

 

50-55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியர்கள் அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு அளிக்கப்படும் என ஒரு சுற்றறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது. இந்தச் சுற்றறிக்கையை மத்திய பணியாளர் நலத்துறை அனுப்பி இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதேபோன்ற ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டே வெளியிட்டு இருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் பல குழப்பங்கள் இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். அதனால் புது அறிக்கையைத் தற்போது பணியாளர் நலத்துறை வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதில், “50-55 வயதைக் கடந்த அல்லது 30 ஆண்டுகள் பணிநிறைவு செய்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பொதுநலன் கருதி பணி ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல மேற்குறிப்பிட்ட வயது அல்லது பணி அனுபவம் கொண்டவர்கள் ஏற்கனவே தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு பணியில் தொடரலாம் என சான்று அளிக்கப் பட்டிருப்பார்கள்.

அவர்களுக்கும் இந்த புதிய விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது. அதாவது அவர்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப் படலாம். ஒருவேளை அந்த ஆய்வில் அவரது தகுதி குறைந்திருத்தது எனத் தெரியவந்தால் அவர்களுக்கும் பணி ஓய்வு வழங்கப்படும்” இவ்வாறு அந்த சுற்றறிற்கை அமைந்திருக்கிறது.