பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை, தமிழக அரசின் நிலைப்பாடு- பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,January 21 2020]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்பதைத் தெளிவு படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசிற்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
நீதிபதிகள் எல் நாகேஷ்வர ராவ் மற்றும் தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 161 வது பிரிவின் கீழ் குற்றவாளிகள் குறித்து எடுக்கப்பட்ட முடிவு பற்றி தெரிவிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னர் பேரறிவாளன் எம்.டி.எம்.ஏ (ஒழுக்கக் கண்காணிப்பு பிரிவு) குறித்த விசாரணை முடியும் வரை இந்த வழக்கில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மனு அளித்திருந்தார். இந்த மனுவினை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் பேரறிவாளன் சார்பாக மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.
அப்போது நீதிமன்றம் பேரறிவாளனுக்கு தண்டனை வழங்கியிருந்தாலும் ஆளுநரிடம் கோரப்பட்ட கருணை மனு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது என வழக்கறிஞர் சங்கரநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார்.
முன்பு சிபிஐ சார்பில் தயாரிக்கப்பட்ட எம்.டி.எம்.ஏ. (ஒழுக்கக் கண்காணிப்பு பிரிவு) குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 14 மத்திய அரசு சமர்பித்திருந்தது. இந்த அறிக்கைக்கும் இதற்கு முன் அளிக்கப்பட்டு இருந்த அறிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என உச்ச நீதிமன்றம் முந்தைய விசாரணையில் அதிருப்தி தெரிவித்து இருந்தது. எனவே புதிய நிலவர அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் குறித்து தமிழக அரசு என்ன முடிவு செய்திருக்கிறது என தான் தெரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதி எல். நாகேஷ்வர ராவ் கூறினார். எனவே அரசியலமைப்பு பிரிவு 161 கீழ் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.