Peranbu Review
இயற்கை: பாராட்டுக்குரியது
ராம் இயக்கிய 'பேரன்பு' ஏற்கனவே ஒருசில உலக திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
குடும்பத்தை கவனிக்காமல், மாற்றுத்திறனாளி பெண் குழந்தையையும் கண்டு கொள்ளாமல் பணம் சம்பாதிக்க பத்து வருடங்கள் துபாயில் வேலை பார்த்த மம்முட்டி, இந்தியா திரும்பும்போது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வேறொருவருடன் ஓடிப்போகிறார். மாற்றுத்திறனாளி மகளை ஒரு தந்தை தனியாக எப்படி காப்பாற்றுகிறார்? மகளை வளர்க்க அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், சங்கடங்கள் என்ன? இறுதியில் என்ன ஆயிற்று என்பதுதான் இந்த படத்தின் கதை.
மம்முட்டி இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளாரா? அல்லது மம்முட்டியின் ஒட்டுமொத்த நடிப்பையும் இயக்குனர் வெளிப்படுத்திவிட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கேரக்டருக்கு மம்முட்டியை விட்டால் வேறு யாரேனும் பொருந்துவார்களா? என்பது சந்தேகம்தான். ஒரு அப்பாவிற்கும் மகளுக்குமான பாச உணர்வை இதைவிட வேறு யாரும் அழகாக நடிப்பில் வெளிப்படுத்த முடியாது. அப்பா என்றால் யாரென்றே தெரியாமால் வளர்ந்த மகள், தன்னை முதலில் பார்த்தவுடன் பயப்படுவதை பார்த்து கண்களில் வெளிப்படுத்தும் சோகம், பின்னர் அவரை சமாதானப்படுத்த மம்முட்டி எடுக்கும் முயற்சிகள், பெரிய மனுஷி ஆனதும் ஒரு தந்தைக்கு ஏற்படும் சங்கடங்கள், அஞ்சலியுடனான உறவு, திருநங்கையிடம் காட்டும் பரிவு என படம் முழுவதும் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் மம்முட்டி.
மாற்றுத்திறனாளி பாப்பாவாக நடித்திருக்கும் சாதனாவின் நடிப்புச்சாதனையை பாராட்ட தமிழில் இனிமேல்தான் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். தேசிய விருது இவருக்கு நிச்சயம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
அஞ்சலியின் கேரக்டர் சிறியதுதான் என்றாலும் அவர் வரும் காட்சிகள் அப்படியே மனதில் பதிகிறது. "எதற்காக இப்படி செஞ்சேன்னு கொஞ்சம் கேட்டுட்டு போங்க சார்'' என்று மம்முட்டியிடம் கண்ணீர்மல்க அஞ்சலி கெஞ்சுவதும், அதற்கு மம்முட்டி சொல்லும் பதிலும் தமிழ் சினிமாவுக்கு புதிது.
திருநங்கை அஞ்சலி அமீர் படத்திற்கு இன்னொரு பிளஸ். மிக இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார்.
ராம் இயக்கிய ஒவ்வொரு காட்சியும் கவிதை என்றால் அந்த கவிதைக்கு உயிர் கொடுத்திருப்பது யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. ஒருசில காட்சிகளை வசனம் இல்லாமல் யுவனின் பின்னணி இசையே புரிய வைக்கின்றது. மெலடி பாடல்கள் படம் முடிந்து வெளியே வந்தபின்னரும் காதில் ஒலித்து கொண்டே இருக்கின்றது. குறிப்பாக 'செத்து போச்சு மனசு, செவிடாச்சு பூமி' பாடலின் வரிகளும், மது ஐயரின் குரலும் உள்ளத்திற்குள் ஊடுருவி ஏதோ செய்கிறது.
தேனி ஈஸ்வரின் கேமிராவில் காண்பிக்கப்படும் குளிர் தியேட்டருக்குள்ளே வந்து நம்மை நடுங்க வைக்கின்றது. மிக அருமையான லொகேஷன்கள், குறிப்பாக அந்த தனிமையான வீடு ஒரு சொர்க்கம் என்றால் அதை காண்பித்த கேமிராவுக்கு என்ன பாராட்டு கூறுவது என்றே தெரியவில்லை.
ஒரு பெண் குழந்தையை அதிலும் மாற்று திறனாளி குழந்தையை தாயாரின் துணை இல்லாமல் ஒரு தந்தை மட்டும் வளர்த்தால் சந்திக்கும் சங்கடங்களை ஒரு முழுப்படமாக இதுவரை யாரும் கூறியதில்லை .அப்படியே கூறியிருந்தாலும் இவ்வளவு அழுத்தமாக சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. டீன் ஏஜ் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் சங்கடங்களை ஒரு தந்தையால் தீர்க்க முடியுமா? என்ற கேள்விக்கு இந்த படத்தில் பதில் உள்ளது. மாற்றுத்திறனாளியாக மூளை வளர்ச்சி குறைவானவராக இருந்தாலும் அவருக்கும் மற்ற பெண்களுக்கு ஏற்படும் உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் படம்.
மகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ய ஒரு தந்தை இப்படியும் ஒரு முடிவெடுப்பாரா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதற்கு மம்முட்டி கொடுக்கும் விளக்கம் ஏற்கும் வகையில் உள்ளது. நாம் சாதாரணமாக கூறும் 'இயற்கை' என்ற ஒரே ஒரு வார்த்தைக்கு இத்தனை விளக்கங்கள் கொடுக்க ராம் அவர்களினால் மட்டுமே முடியும். சினிமாவின் மீது இயக்குனர் ராம் வைத்திருக்கும் 'பேரன்பு' தான் அவருக்கு இந்தமாதிரியான ஒரு படத்தை இயக்க வைத்துள்ளது.
மொத்தத்தில் 'பேரன்பு' உலக அரங்கில் தமிழ் சினிமாவை நிமிர வைக்கும் ஒரு முயற்சி
- Read in English