பொது ரசிகர்களை சென்றடையுமா பேரன்பு?
Send us your feedback to audioarticles@vaarta.com
ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பாராட்டுக்களையும் ஒருசிலர் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஒருசில டுவிட்டர் டிராக்கர்கள் இந்த படத்திற்கு முழு மதிப்பெண் கொடுத்து போற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படம் மேக்கிங் போற்றத்தக்க வகையில் இருந்தாலும் நார்மல் ஆடியன்ஸ்களை இந்த படம் கவருமா, இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த படத்தில் சமூகத்தில் அங்கீகரிக்க முடியாத, சாதாரண மக்கள் ஏற்றுக் முடியாத ஒருசில விஷயங்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக மம்முட்டி கேரக்டர் துபாயில் இருக்கும் பத்து வருட காலத்தில் மாற்றுத்திறனாளி, மன வளர்ச்சி குன்றிய குழந்தையை அன்புடன் கவனித்து கொண்ட அவருடைய மனைவி, சரியாக துபாயில் இருந்து இந்தியா வரும் நாளில் வேறொருவருடன் ஓடிப்போவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல் மம்முட்டியும் அவருடைய மகளும் தனிமையில் இனிமையாகவும் நிம்மதியாகவும் பொழுதை கழித்து கொண்டிருந்தபோது திடீரென வேலைக்காரியாக அறிமுகமாகும் அஞ்சலி கேரக்டர், மம்முட்டியிடம் இருந்து அந்த வீட்டை அபகரிக்க தனது கற்பை மம்முட்டியிடம் இழக்கின்றார். இதையே ஜீரணிக்க முடியாத நிலையில், இதற்கு அஞ்சலியின் கணவர் கேரக்டரும் உடன்படுவதாக கூறியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே தெரியவில்லை. அஞசலியின் கணவரிடமே அஞ்சலியை தான் திருமணம் செய்துவிட்டதாக மம்முட்டி கூறுவதும், அதற்கு அஞ்சலியின் கணவர் நெளிவதும் நகைச்சுவையாக இருந்தாலும் அநாகரிகத்தின் உச்சகட்டமாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் இந்த படத்தில் மம்முட்டி ஒரு அப்பாவி கேர்க்டர்தான். அடிதடி சண்டை எதற்கும் போகாத கேரக்டர். அதனால் வில்லன்கள் அவரை அடித்து துன்புறுத்தி வீட்டை எழுதி வாங்க எளிதில் முடியும். அஞ்சலியை அனுப்பி மம்முட்டியை மயக்கி வீட்டை எழுதி வாங்க வேண்டும் போன்ற காட்சி வைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்பது தெரியவில்லை
அதேபோல் மனவளர்ச்சி குன்றிய டீன் ஏஜ் பெண்ணுக்கும் செக்ஸ் உணர்வு உண்டு என்று கூறுவதை கண்டிப்பாக யாரும் குறை சொல்ல முடியாது ஆனால் அதற்காக மகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ய ஆண் விபச்சாரியை தந்தையே தேடுவது என்பது, செக்ஸ் என்பதை எளிமையாக எடுத்து கொள்ளும் மேலைநாடுகளில் கூட நடக்காத கொடுமை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.. அதற்கு மம்முட்டி கொடுக்கும் விளக்கம், 'மகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்யத்தானே ஒரு தகப்பன் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கின்றார்' என்று கூறுவது காலங்காலமாக நடந்து வரும் திருமணங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். திருமணம் என்பது கணவன், கணவரின் சொந்தங்களின் அன்பு பாசம், குடும்பம், குழந்தைகள் என உறவுகள் விரிவது சம்பந்தப்பட்டது. செக்ஸ் என்பது திருமணத்தின் ஒரு பகுதிதான் என்பதே தவிர், செக்ஸையும் தாண்டி பல புனிதமான விஷயங்கள் திருமணத்தில் உள்ளது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.
மேலும் பெண் குழந்தைகள் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், குறிப்பாக பருவம் அடைந்த பின்னர் அப்பா மட்டுமின்றி அண்ணன், தம்பி ஆகியோர்களிடம் கூட ஒரு இடைவெளியுடன் இருந்து வருவதைத்தான் நாம் காலம் காலமாக பார்த்து வருகிறோம். குறிப்பாக மாதவிலக்கு விஷயத்தை தனது குடும்பத்து ஆண்களிடம் கூட எந்த பெண்ணும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த படத்தில் மகளின் மாதவிலக்கு நேரங்களில் அப்பாவே பேட் மாத்தி விடும் காட்சிகள் அருவருப்பை நிச்சயம் தரவில்லை என்றாலும் உறுத்தும் வகையில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர்
இதேபோல் மன வளர்ச்சி குன்றிய, மூளை முடக்குவாத நோய் பாதித்த பெண் குழந்தைகளை பார்த்து கொள்ள பத்தாயிரம் சம்பளத்தில் நர்ஸை வைத்து கொள்வதை பல இடங்களில் நாம் நிஜத்தில் பார்த்து வருகிறோம். ஒரு தகப்பன் இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. மேலும் ஒரு தகப்பன் மூளை முடக்கு நோய் வந்த ஒரு மகளை தனியாக கஷ்டங்களுக்கு ஒரு நல்ல தீர்வு இந்த படத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதே பலரது ஆதங்கமாக உள்ளது. மம்முட்டி கேரக்டரை போல் இம்மாதிரியான குழந்தைகள் வைத்திருப்பவர்கள் திருநங்கையை திருமணம் செய்து கொள்வதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வா?
இயக்குனர் ராம் மிகத்திறமையான இயக்குனர்களில் ஒருவர். குறிஞ்சிப்பூ போல் அபூர்வமாக, யாரும் தொடாத சப்ஜெக்டை எடுத்து அழுத்தமான, ஆழமான காட்சிகளுடன் படம் இயக்கியுள்ள ராம், இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.
உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்று இந்த படம் பல பாராட்டுகளை பெற்றிருந்தாலும் இந்த படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் ஆடியன்ஸ்களிடம் போய்ச்சேர வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழர்கள் குறிப்பாக தமிழ்ப்பெண்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாத காட்சிகள் அடங்கிய இந்த படம் பொதுமக்களின் வரவேற்பினை பெறுமா? என்பதையும், பொழுதுபோக்கு அம்சமும் இன்றி, ஒரு சீரியஸான பிரச்சனைக்கு தீர்வும் சொல்லப்படாத இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்
பேரன்பு திரைவிமர்சனம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments