உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட பெப்சி
- IndiaGlitz, [Thursday,April 25 2019]
தாங்கள் காப்புரிமை பெற்ற ஒரு குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்கை பயிர் செய்த குஜராத் விவசாயிகள் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது
பெப்சி நிறுவனம் தயாரிக்கும் லேஸ் என்ற உணவுப்பொருட்களுக்காக எப்.எல்.2027 என்ற வகை உருளைக்கிழங்கை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளது. இந்த வகை உருளைக்கிழங்கை பயிர் செய்தால், விளையும் அனைத்து உருளைக்கிழங்குகளையும் தாங்களே கொள்முதல் செய்து கொள்வதாகவும் சில விவசாயிகளிடம் இந்நிறுவனம் ஒப்பந்தமும் செய்துள்ளது
இந்த நிலையில் ஒப்பந்தம் செய்யாத வேறு சில விவசாயிகளும் இதே எப்.எல்.2027 வகை உருளைக்கிழங்கை பயிர் செய்துள்ளதை தனியார் துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடித்த பெப்சி, தற்போது குஜராத்த்தை சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது தலா ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு கோடி ரூபாயை தங்கள் வாழ்நாளில் பார்த்திராத அந்த விவசாயிகள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு தொடரப்பட்ட விவசாயிகள் கூறியபோது, விவசாயம் செய்யும் நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் விதைகளை பயிரிடுகிறோம். அந்த வகையில் தான் இந்த விதைகளையும் பயிரிட்டோம். இது பற்றி தகவல் அறிந்த பெப்சி நிறுவனம் தனியார் துப்பறியும் நிபுணர்களை கொண்டு எங்களுக்கு தெரியாமல் தோட்டத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளது. எங்களுக்கே தெரியாமல் எங்கள் நிலத்தில் அத்துமீறி மாதிரிகளை எடுத்தது மட்டுமின்றி அதையும் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தில் குஜராத் அரசும் மத்திய அரசும் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
விவசாயிகளின் காவலன் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியின் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் மீதே ஒரு வெளிநாட்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதால் இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.