இன்று முதல் வெளிநாட்டு பானங்களுக்கு மூடுவிழா. இளைஞர்களின் 2வது வெற்றி

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

கடந்த மாதம் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை திருப்பியது மட்டுமின்றி தமிழக மக்களிடையே பல்வேறு விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியது. அவற்றில் ஒன்று கலர்ப்பொடி கலந்த பூச்சிமருந்து என்று கூறப்படும் வெளிநாட்டு பானங்களை தவிர்ப்பது. ஐ.டி.ஊழியர்கள் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட இந்த போராட்டத்தின் பயனாக ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டபோதிலும், அதைவிட தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக வெளிநாட்டு பானங்கள் குறித்த தீமைகள் மக்களிடம் பரவியது
கடந்த பல ஆண்டுகளாக சமூக நல ஆர்வலர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைவிட ஒரே வாரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் வெளிநாட்டு பானங்களின் தீமையை புரிந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் பேரவை மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்களை விற்பனை செய்வது இல்லை என்று அதிரடியாக முடிவெடுத்தன. அந்த மார்ச் 1 இன்றுதான்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களில் இன்று முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பனை இல்லை என்று போர்டு வைத்துள்ளதே இளைஞர்கள் போராட்டத்தின் இன்னொரு வெற்றியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெளிநாட்டு பானங்களின் விற்பனை 80% அளவுக்கு குறைந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று முதல் அது 100% குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு பானங்களில் காலி பாட்டில்கள் மட்டுமே முன்பெல்லாம் குப்பையில் இருக்கும் என்ற காலம் மாறி இன்று பல குப்பை தொட்டிகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கொட்டி கிடப்பதே நமக்கு கிடைத்த வெற்றிக்கு சான்றாக கருதப்படுகிறது.
வெளிநாடு பானங்களுக்கு பதிலாக இளநீர், மோர் போன்ற நமது பாரம்பரிய பானங்களை குடிப்பதால் நம்மூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகுவதோடு, நமது உடலுக்கும் நன்மை பயக்கும். இளைஞர்களின் இரண்டாவது வெற்றியாக கருதப்படும் இந்த மாற்றம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.