சபரிமலை செல்ல முயன்ற இளம்பெண் மீது பெப்பர் ஸ்பிரே: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 26 2019]

ஒருசில தவறான நோக்கம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடி ஸ்பிரே அடிக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண் மீது ஒருவர் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் பெண்கள் சபரிமலைக்கு செல்ல பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல முயற்சிக்கும் பெண்கள் தாக்கப்படுவதும், திருப்பி அனுப்பப்படுவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து என்ற பெண் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டு கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மனு ஒன்றை கொடுத்தார். அவர் காவல்துறை ஆணையத்தில் மனு கொடுத்துவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது திடீரென இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அந்த பிந்து மீது பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பிந்து மீது பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்த பின்னரும் பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் ஆகும் என்றும், இதுகுறித்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

இருப்பினும் பக்தியோடு மாலை அணிந்து சபரிமலைக்கு வரும் பெண்களை தாங்கள் தடுக்கப்போவதில்லை என்றும், ஆனால் புரட்சி செய்யும் நோக்கத்துடன் வீம்புக்கு சபரிமலை வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் பக்தர்களில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.