ஊரடங்கில் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக ரூ.9.4 லட்சம் நிதி திரட்டிய சிறுமி!!!
- IndiaGlitz, [Thursday,April 16 2020]
ஹைத்ராபாத் அடுத்த இந்தூரில் ஊரடங்கு உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழைகளுக்கு உணவளிக்கும் பொருட்டு 11 வயது சிறுமி ஒருவர் ரூ.9.4 லட்சம் நிதியை திரட்டியிருக்கிறார். 6 ஆம் வகுப்பு படிக்கும் ரித்தி, சாலைகள் செல்வோர், கூட்டம் நிறைந்த இடங்கள் மற்றும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எனப் பலரிடம் இருந்து ஏழைகளுக்கு வழங்கும் பொருட்டு இந்த நிதியை திரட்டியிருக்கிறார்.
“எனது மகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஏழைகளை நினைத்து வருத்தப்பட்டார். ஊடகங்களில் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது ஏதாவது ஒருவகையில் உதவேண்டும் என்று நினைத்தார்” என அவரது தாய் ஷில்பா குறிப்பிட்டுள்ளார். முதலில் தனது சொந்த சேமிப்பை ஊரடங்கில் தவித்து வந்த ஏழைகளுக்கு இந்த சிறுமி வழங்கியுள்ளார். பின்னர் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 1 பாக்கெட் மிளகாய் பொடி, 1 பாக்கெட் மஞ்சள் பொடி, 1 கிலொ சமையல் எண்ணெய் மற்றம் 2 சோப்புகள் போன்றவை அடங்கிய 200 தொகுப்புப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்கியதாகவும் அவரது தாய் ஷில்பா குறிப்பிட்டுள்ளார். இந்தப்பொருட்களை ஹைத்ராபாத் காவல் துறையினரின் உதவியோடு கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 725 தொகுப்புப் பொருட்கள் சிறுமியின் சார்பாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 தொகுப்பு பொருட்களை விநோகிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கினால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கும் அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கும் உதவிப்புரியும் நோக்கில் செயல்பட்டு வரும் சிறுமி ரித்திக்கு தற்போது பல முனைகளில் பாராட்டுகளும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.