கொரோனா, வேலையின்மை, வாடகை பிரச்சனை: சென்னையை காலி செய்யும் பொதுமக்கள்
- IndiaGlitz, [Sunday,June 14 2020]
சொந்த ஊரில் வேலை இல்லை, வருமானம் இல்லை என்றால் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது சென்னைதான். சென்னை சென்றால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற கனவோடு சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம், வேலையில்லாமல் வருமான இன்றி இருப்பது இன்னொருபுறம் என பொதுமக்களை கதிகலங்க வைத்திருப்பதால் சென்னையை காலி செய்துவிட்டு மூட்டை முடிச்சுகளோடு தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், திருவிக நகர் ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலையில்லாமல் வருமானமின்றி வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் கண்டிப்பாக வாடகை கொடுக்க வேண்டும் அல்லது காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதால் வேறு வழியின்றி தற்போது சென்னையை விட்டு காலி செய்து சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
வந்தாரை வாழவைக்கும் நகரமாக இருந்த சென்னை தற்போது நம்பி வந்தவர்களை வெளியேற்றி வருவது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சொந்த ஊரில் பலருக்கு சொந்த வீடு இருக்கும் அப்படியே இல்லை என்றாலும் வாடகை ரூ.1000, ரூ.2000 என குறைவாக தான் இருக்கும். 100 அல்லது 200 ரூபாய்க்கு தினமும் வேலை பார்த்தால் கூட அங்கு பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தற்போது அனைவரும் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் சென்னையின் மக்கள் தொகை பெருமளவு குறைந்து விடும் என்று கூறப்படுகிறது.