மீண்டும் பணமதிப்பிழப்பா? ஏடிஎம் நோக்கி குவியும் பொதுமக்கள்
- IndiaGlitz, [Thursday,August 08 2019]
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, திடீரென 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க, இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, ஏடிஎம்மை நோக்கி மக்கள் குவியத் தொடங்கினர். இந்த பிரச்சனையில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் ஆறு மாத காலம் ஆனது. இருப்பினும் எந்த நோக்கத்திற்காக இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறவில்லை என பொருளாதார நிபுணர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடமும் உரையாற்ற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியை மக்களுக்கு நினைவுபடுத்தி உள்ளதால் திடீரென ஏடிஎம் மையங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நாடு தற்போது இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையிலும், பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருக்கும் நிலையிலும் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு அறிவிப்பை நாடு தாங்காது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே இன்றைய பிரதமரின் பேச்சில் பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் காஷ்மீரில் 370வது சிறப்புப்பிரிவு நீக்கப்பட்டது குறித்த விளக்கத்தை பிரதமர் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதே 8ஆம் தேதி என்பதால் பொதுமக்கள் ஒருவித பயத்துடன் ஏடிஎம்-ஐ நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.