கொரோனாவால் குணமானவரை ஊருக்குள் அனுமதிக்காத பொதுமக்கள்: புதிய தீண்டாமையா?
- IndiaGlitz, [Friday,April 17 2020]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்ப இருப்பதை கேள்விப்பட்டு பொதுமக்கள் போராட்டம் செய்து அந்த நபரை ஊருக்குள் அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் முற்றிலும் குணமாகி விட்டதாகவும் அவர் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கொரோனாவால் பாதித்த நபர் தங்கள் ஊருக்குள் நுழைய கூடாது என்று அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மீண்டும் அந்த நபர் பழனி அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து போராட்டம் செய்த பொதுமக்களிடம் அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றும் வீட்டிற்குள் அவர் வந்தாலும் இன்னும் சில வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று எடுத்துக் கூறினார். இதனை அடுத்து அந்த நபரை ஊருக்குள் வர பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர். கொரோனாவால் மக்களிடையே புதிய தீண்டாமை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.