தண்ணீர் டேங்கில் கலைவண்ணம்… கண்ணைப் பறிக்கும் வீடுகள்!
- IndiaGlitz, [Tuesday,November 16 2021]
பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் பகுதியில் பெரும்பாலான வீடுகள் சில வித்தியாசமான தனித்துவத்தை கொண்டிருக்கின்றன. இந்தக் கலை தற்போது இந்தியா முழுக்கப் பேசப்பட்டு வரும் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
ஜலந்தர் அருகேயுள்ள கிராமங்களில் கடந்த 1970 கள் வாக்கில் குடிப்புகுந்த NRIகள் தங்களது வீட்டு தண்ணீர் டேங்குகளை வித்தியாசமாக வடிவமைக்கத் துவங்கியிருந்தனர். அதாவது வீட்டுத் தண்ணீர் டேங்குகள் மீது விமானம், கப்பல், டிரக், கார், போர் விமானம் என்று ஏதாவது ஒரு பொருளை தத்ரூபமாக வடிவமைத்தனர். இது பார்ப்பதற்கு வித்தியாசமான ஒரு உணர்வையும் புத்துணர்ச்சியையும் தந்தது.
இந்தக் கலை தற்போது ஜலந்தரின் உபால் பூபா கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. அந்த வகையில் உபால் பூபா கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் தற்போது தண்ணீர் டேங்குகள் மீது தாமரை பூக்கள், போர் விமானங்கள், எல்லைக் காவலர்கள், இராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள், விமானம், கப்பல், டிராக்டர் என்று பல்வேறு பொருட்கள் அலங்கரிக்கத் துவங்கியிருக்கிறது.
இதனால் இந்தியாவிலேயே பஞ்சாப்பின் ஜலந்தர் பகுதியில் இருக்கும் வீடுகள் மட்டும் தனித்துவமான வடிவங்களுடன் காட்சியளிக்கின்றன. மேலும் பார்ப்பதற்கு புது உற்சாகத்தையும் இது கொடுக்கத் துவங்கியிருக்கிறது.