ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறப்பது  இனப்படுகொலைக்கு நிகர்...! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...!

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமமானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை, மக்களை கொடூரமாய் தாக்கி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை விட, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல் ஆம்புலன்சிலே உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலங்களிலும் வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்து கொத்தாக பலியாகும் சம்பவம் பார்ப்போரை பதைபதைக்க செய்கின்றது.

பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணத்தாலும், சரியான சுகாதார வசதிகள் இல்லாததாலும் உயிரிழக்கும் அவலம்

ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கமுடியாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்யாமலும் இருப்பது இனப்படுகொலைக்கு சமம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள், சித்தார்த் வர்மா, அஜித் குமார் உள்ளிட்டோரின் அமர்வில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து, உத்திரப்பிரதேச அரசை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.

இதுகுறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது,

மிகவும் வருத்தமான சூழலில் தான் நாங்கள் இந்த வழக்குகளை விசாரிக்கிறோம். பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜனை சரியான நேரத்தில் தராதது இனப்படுகொலை மற்றும் கிரிமினல் குற்றத்திற்கு சமம். இதுகுறித்து அரசு நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் சரியான நடவடிக்கைகள் எடுத்து பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இங்கோ மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்த அளவிற்கு அறிவியல் முன்னேறிவிட்ட காலத்திலும், மக்கள் சாலைகளில் நின்று ஆக்சிஜனுக்கு பிச்சை எடுக்கிறார்கள். அரசு அதிகாரிகளிடம் கையேந்துகிறார்கள், ஆனால் அரசு மக்களை அலைக்கழிக்க செய்கின்றது. மக்களை இப்படி உயிரிழக்கவிட அரசால் எப்படி முடிகிறது. உத்திரப்பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையான அளவில் உள்ளது என அரசு சார்பாக கூறப்படுகிறது. ஆனால் சமூகவலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் அதற்கு மாறாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

நீதிமன்றம் சமூகவலைத்தளங்களில் வரும் செய்திகளை வைத்து மட்டுமே உத்தரவுகளை பிறப்பிக்காது. ஆனால் தற்சமயத்தில் நாங்கள் அந்த கட்டாயத்தில் உள்ளோம். இங்கு ஆஜராகும் வழக்கறிஞர்களும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதை உறுதி செய்ததாக கூறுகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகிகள் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீரட், லக்னோ மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் இதுகுறித்து 48 மணிநேரங்களில் கட்டாயமாக பதிலளித்து, ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீரட் மருத்துவக்கல்லூரி, லக்னோவில் இருக்கும் சன் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழந்ததாக, செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.