அமைதியாக போராடுபவர்களை தேசவிரோதிகள் என சொல்லக் கூடாது..! உயர்நீதிமன்றம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்திருக்கின்றனர். மேலும், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த மாவட்ட நீதிமன்றமும் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருக்கிறது. இதை எதிர்த்து, இஃப்திகார் ஜாகி ஷேக் என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி -க்கு எதிராக, மஜால்கான் பகுதியில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றம் சென்றபோது, அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போலீஸார் தாக்கல் செய்த மனுவை ஏற்று, நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது. அமைதியான முறையில் மாஜால்கான் பகுதியில் உள்ள பழைய இத்கா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் ஔரங்காபாத் கிளை, பீட் மாவட்ட நீதிமன்றம் மற்றும் பீட் மாவட்ட காவல்துறை பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தடை விதித்தது. மேலும், அமைதியான முறையில் போராட முயல்பவர்களை, அவர்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தேசவிரோதிகள் என்றோ, துரோகிகள் என்றோ அழைக்கப்படக் கூடாது. எனவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. சி.ஏ.ஏ -வுக்கு எதிராக அமைதியாகப் போராட்டம் நடத்துவதால், அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்று பொருளாகாது. சி.ஏ.ஏ -வைக் கொண்டுவந்த அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே அது பார்க்கப்பட வேண்டும்.
வன்முறை இல்லா அமைதியான போராட்டங்கள் மூலமே நமது நாடு விடுதலைபெற்றது. நம் முன்னோர்களின் அந்தப் பாதையை இன்று வரை மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். நம் நாட்டின் பெரும்பாலான மக்கள், அந்த வழியையே பின்பற்ற விரும்புவது, நமது அதிர்ஷ்டம். இந்த விவகாரத்தில்கூட மனுதாரர்கள், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட விரும்புகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நம் முன்னோர்கள் நமது விடுதலைக்காகவும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் அமைதியான முறையில் போராடினர். அந்தப் போராட்டங்களின் பின்னணியில் உள்ள தத்துவத்தின் அடிப்படையிலேயே நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments