சினிமா தான் முதல்வர் ஆவதற்கான முதல் தகுதியா? பிசி ஸ்ரீராம்
- IndiaGlitz, [Friday,January 18 2019]
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா என தமிழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையை சேர்ந்த ஒருவரையே முதல்வராக தேர்வு செய்துள்ளது. இன்னும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால் என பல சினிமாக்காரர்கள் முதல்வர் பதவியை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் சினிமாக்காரர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியலில் நுழைய அனைவருக்கும் சுதந்திரம் இருந்தாலும் முதல்வர் பதவியை பிடிக்க சினிமா தான் தகுதி என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது சினிமா மாயை தகர்ந்துவிட்டது. இப்போதுள்ள ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கின்றானர். வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல சினிமாவும் அரசியலும் ஒன்றிணையவில்லை. இனிமேல் தமிழகத்திலும் சினிமா மாயை செல்லாது என்று கூறியுள்ளார்.
மேலும் 'பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ், 'மேற்கு தொடர்ச்சி மலை' லெனின் பாரதி போன்ற இயக்குனர்கள் சினிமாவை மிக அருமையாக தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு படத்தை வியாபாரம் செய்ய தெரியவில்லை. இந்த குழப்பத்திற்கும் சினிமாவும், அரசியலும் கலந்ததுதான் காரணம் என நினைக்கின்றேன்' என்றும் பிசி ஸ்ரீராம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.