மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பொங்கி எழும் திரையுலகினர்

  • IndiaGlitz, [Saturday,October 05 2019]

மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி ஜனநாயக நாடா? அல்லது சர்வாதிகார நாடா? என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மணிரத்னம் உள்பட 50 பேர்களுக்கும் ஆதரவாக திரையுலகினர் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரும் மணிரத்னம் இயக்கிய சில படங்களில் பணிபுரிந்தவருமான ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இதுகுறித்து கூறியபோது, ‘நம் கருத்தை சொன்னால் அது தேச துரோகமா? அப்படி என்றால் நாம் அமைதியாக இருக்கவேண்டும், அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் நினைத்ததை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து கூறியபோது, ‘நமக்கு என்னதான் ஆச்சு. இந்த செய்தியை கேட்டதும் என்னால் முற்றிலும் நம்பமுடியவில்லை. ஏனெனில், நாங்கள் எழுதிய இந்த கடிதத்திற்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அரசை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் ஆகாது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம். அந்தக் கடிதம் நம்முடைய ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தில் எழுதப்பட்டது. நாட்டின் பன்முகத்தன்மையை நம்முடைய ஜனநாயக நாட்டின் நிலைநிறுத்த வேண்டும் என்றே அந்த கடிதம் கோருகிறது. இதனை தேச துரோகம் என்பதுபோல் சித்தரிக்கக் கூடாது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதில் எங்களுக்கும் ஒரு கடமை இருக்கின்றது என நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.