மதுரை உணவகத்தின் மெனுவில் பழைய சோறு: ஆன்லைனிலும் விற்பனை
- IndiaGlitz, [Saturday,April 20 2019]
கடந்த தலைமுறையினர் விரும்பி சாப்பிட்ட உணவுகளில் ஒன்று பழைய சோறு. வெயில் காலத்தில் பழைய சோறும், பச்சை மிளகாயும் சாப்பிட்டால் அதில் இருக்கும் ருசியும், உடலுக்கு குளிர்ச்சியும் வேறு எதிலும் இருக்காது. ஆனால் இன்றைய இளையதலைமுறையினர் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் என பழகிவிட்டதால் பழைய சோறை பலர் கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டார்கள்
இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள உணவகம் ஒன்றில் பழைய சோறை தனது மெனுக்களில் ஒன்றாக இணைத்துள்ளனர். மண் கலயத்தில் பழைய சோறும் அதனுடன் மசால் வடை, பச்சை மிளகாய், வெங்காயமும் தருகின்றனர். பழைய தலைமுறையினர் மட்டுமின்றி இன்றைய இளையதலைமுறையினர்களும் இதன் மகத்துவத்தை தெரிந்து விரும்பி சாப்பிடுவதாக இந்த உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்,.
முதலில் வெயில் காலத்தில் மட்டுமே இந்த உணவை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தரும் வரவேற்பு காரணமாக தங்களுடைய மெனுவில் நிரந்தரமாக இந்த உணவை இணைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பழைய சோறை ஆன்லைனிலும் ஆர்டர் செய்தல் வீட்டுக்கே சென்று டெலிவரியும் செய்யப்படுகிறது. டூத் பேஸ்ட்டில் உப்பு கலப்பது உள்பட நமது முன்னோர்களின் பல விஷயங்கள் புதிய வடிவில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றாக பழைய சோறும் இணைந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது