ரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து
- IndiaGlitz, [Wednesday,January 22 2020]
ரஜினிகாந்த் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும், பேட்டி அளித்தாலும் அவரது கருத்துக்கு எதிர் கருத்து கூறுவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். ரஜினி சொல்வது சரியோ தவறோ அதெல்லாம் பொருட்டில்லை, அவர் சொல்வதை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் பல அரசியல் தலைவர்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த சர்ச்சை இன்னும் அடங்காமல் உள்ளது. அனைத்து அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து விட்டனர் என்பதும், அனைத்து ஊடகங்களும் இது குறித்து விவாதம் செய்து முடித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து பழம்பெரும் அரசியல்வாதியும், தமிழறிஞரும், விஜயின் சர்கார் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துருமான பழ. கருப்பையா அவர்கள் கூறியபோது ’ரஜினி எதைச் சொன்னாலும் உடனே பாய்வது என்பது அரசியல்வாதிகள் அவரை பார்த்து பயப்படுவதை காண்பிக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கின்ற எந்த தலைவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு என்பது கிடையாது. ஆகவே ரஜினியின் கருத்து மக்களிடம் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். அதனால் ரஜினி எதை சொன்னாலும் எதிர்ப்பது என்று அரசியல்வாதிகள் கிளம்புவதாக எனக்கு தோன்றுகிறது.
ரஜினி சொல்வது தவறாக இருந்தால் மக்கள் அதை புறந்தள்ளி விட்டு போவார்கள். அதுமட்டுமின்றி தவறான கருத்தை சொல்லிய ரஜினியையும் தவறாக நினைப்பார்கள் என்று பழ கருப்பையா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.