மக்களின் கவிஞர் 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்' பிறந்த தின கட்டுரை
- IndiaGlitz, [Thursday,April 13 2017]
'திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது ,
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'
இந்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதி சுமார் 50 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றைய டெக்னாலஜி உலகிலும் இந்த வரிகள் பொருத்தமாக இருப்பதுதான் ஆச்சரியம். இதுபோன்ற கருத்தாழமிக்க பாடல்களை எழுதிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 86வது பிறந்த நாள் இன்று. இன்றைய நாளில் அவரை பற்றிய ஒருசில நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு மகனாக 13.04.1930ஆம் ஆண்டு எளிய விவசாய குடும்பத்தில் கல்யாணசுந்தரம் பிறந்தார். இவர் தந்தையும் மிகப்பெரிய கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் படிக்கும்போதே திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டில் கெளரவாம்பாள் அகால மரணம் அடைந்தார்.
19வது வயதிலேயே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய கல்யாணசுந்தரம் கிராமியப் பாடல்களை மண்ணின் மணத்தோடு எழுதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். இவருடைய பாடல்களில் உணர்ச்சியும், நகைச்சுவையும் கிண்டலும் கேலியும் கலந்திருக்கும். மேலும் படிக்காதவர்களுக்கும் புரியும்படியாக மிக எளிய வார்த்தைகளை கொண்டுதான் இவரது பெரும்பாலான பாடல்கள் இருக்கும். சமூகத்தில் உள்ள குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டும் வகையில் இவரது பாடல் இருக்கும். 1955ஆம் ஆண்டு 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக எழுதியதே இவரது 'முதல் திரையிசை பாடல்
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு 1950களில் பாடல்கள் எழுதினார். இவர் திரைத்துறையில் இருந்தது வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய மொத்த திரைப்படப்பாடல்கள் 180 மட்டுமே. ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாத காவியங்கள். இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் என இவரது பாடல்களின் இல்லாத கருப்பொருளே இல்லை எனலாம்.
சின்னப் பயலே சின்னப் பயலே', தூங்காதே தம்பி தூங்காதே', ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே', எல்லோரும் இந்நாட்டு மன்னரே', செய்யும் தொழிலே தெய்வம்' 'ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே', 'உன்னைக் கண்டு நானாட' 'துள்ளாத மனமும் துள்ளும்' ஆகியவை பாடல்கள் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்கள் ஆகும்.
இவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர் என்பதும் இவர் காலமாகும் வரை எம்.ஜி.ஆர் இவரைத்தான் தனது படங்களுக்கு பாடல் எழுத அனுமதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர் முதன்முதலில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதும், 'என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்'' என்று கூறியதே இவர்களுடைய உண்மையான நட்புக்கு சான்று
உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்'' என்று நிருபர் ஒருவர் இவரிடம் வந்து கேட்டாராம். அப்போது அவரை தனது வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்ஷா ஒன்றில் அவரை அழைத்துச் சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... உடனே கூட வந்த நிருபர், கவிஞரே, வாழ்க்கை வரலாறு'' என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?'' என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச் சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர் கல்யாணசுந்தரனார்
பட்டுக்கோட்டையார் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான இன்னொரு சம்பவம். கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார். ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ'' என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்'' என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம், சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாயால் வளர்ந்தேன்...
தமிழால் அறிவு பெற்றேன்...
நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...
நீ யார் என்னை நில் என்று சொல்ல?' என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்தநிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினார்
இவரது காலத்தில் புகழ் பெற்றிருந்த இன்னொரு கவிஞர் கண்ணதாசன். இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் விமர்சித்து வந்தார். குறிப்பாக கவிஞர் கண்ணதாசனை அடிக்கடி அவர் விமர்சித்து வந்தார். அந்த சமயத்தில் ஒரு விழாவில் அந்தப் பத்திரிகை ஆசிரியரைக் கல்யாணசுந்தரம் சந்தித்தபோது கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக் கவிதையைப் பற்றி என்ன தெரியும்?'' என்று கோபத்துடன் நேருக்கு நேராய் கேட்டாராம்.
இந்நிலையில் 1959ஆம் ஆண்டு கல்யாணசுந்தரம் மறைந்த தினத்தில் கண்ணதாசன்
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே!
என்ற பாடலை எழுதி தங்களது நட்பை வெளிப்படுத்தினார்
மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.
இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.