கொரோனா பாதித்த பெண்ணிற்கு ஆட்டோவில் சிகிச்சை… மனதை உருக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

இந்தியாவில் கொரோனா தற்போது தீவிரம் அடைந்து இருப்பதை ஒட்டி பிரதமர் நரேந்திர முக்கிய மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் பெற்று இருக்கும் பல மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியில் வரும் 26 ஆம் தேதி வரை முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே மீண்டும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளில் கொரோனாவால் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூட மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கர்நாடகாவின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தற்போது நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கொரோனா பாதித்த பெண் ஒருவர் கல்புர்க்கி அருகே உள்ள ஜிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையிலும் சிகிச்சைக்கான இடம் இல்லாமல் அவதிப்பட்ட அவரை மருத்துவர்கள் ஆட்டோவில் வைத்தே சிகிச்சை அளித்து உள்ள காட்சி தற்போது பார்ப்போரை கண்கலங்க வைத்து இருக்கிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சளி மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 55 வயது பெண்மணிக்கு மருத்துவர்கள் ஆட்டோவில் வைத்தே ஆக்சிஜன் சிலிண்டரைக் கொண்டு சிகிச்சை அளித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மும்பை பகுதியில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.