கிரவுண்டுக்குள் சுத்தியலோடு நுழைந்த ஆஸ். கேப்டன்… ரசிகர்களை பதற வைத்த வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 16 2022] Sports News
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் தொடர் போட்டி விறுவிறுப்பாக ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சுத்தியலை வைத்து கிரிக்கெட் கிரவுண்டை சரிப்படுத்தும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியினர் இரண்டாவது டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 556 ரன்களை எடுத்த நிலையில் எதிரணியான பாகிஸ்தான் 148 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 408 ரன்களுடன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளுக்கு 66 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் 506 ரன்கள் இலக்குடன் நேற்றைய போட்டியில் விளையாடிய நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பந்து வீசத் திணறினர். மேலும் ஆடுகளம் படுமோசமாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய நிலையில் அதை பணியாளர்கள் வந்து சரி செய்தனர். ஆனாலும் அவர்களுடைய வேலையில் திருப்தி கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திடீரென சுத்தியலை வாங்கி தானே கிரவுண்டை சரிப்படுத்தத் துவங்கிவிட்டார். இதுகுறித்த வீடியோதான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடைய கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்குமுன்பே பாகிஸ்தான் நாட்டின் ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. ஆனாலும் தொடர்ந்து அந்தக் கிரிக்கெட் களம் சரிசெய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் இதே சர்ச்சை நீடித்துவரும் நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சுத்தியலை வைத்து அடித்திருக்கும் காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போட்டியில் தற்போது விளையாடிவரும் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்திருக்கிறது. மேலும் 314 ரன்கள் தேவைப்படும் நிலையில்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுகளம் குறித்து குற்றம் சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
So @patcummins30 is Thor ? ??#BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/kAn8oqtVWn
— Pakistan Cricket (@TheRealPCB) March 15, 2022