பசங்க-2 திரைவிமர்சனம். பெற்றோர்களுக்கான பாடம்

  • IndiaGlitz, [Thursday,December 24 2015]

பசங்க' படத்தின்போதே தான் ஒரு குழந்தைகளின் இயக்குனர் என்பதை நிரூபித்த இயக்குனர் பாண்டியராஜ் மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து இயக்கியுள்ள படம்தான் 'பசங்க 2'. சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படம் சிறப்பான படம்தானா? என்பதை பார்ப்போம்.


முதலில் இந்த படத்தை பற்றி ஒரு முன்னுரை. இந்த படம் குழந்தைகளுக்கான படம் என்றே இதுவரை விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் இது ஒரு பெற்றோர்களுக்கான படம். குழந்தைகளை உருவாக்குவதும், அவர்களை உயர்வானவர்களாக மாற்றுவதும் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. ஒரு தாய் கர்ப்பமான முதல் நாளில் இருந்து குழந்தை பிறக்கும் வரை என்ன செய்ய வேண்டும், குழந்தைகளை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பாண்டியராஜ் படமாக எடுக்கவில்லை. ஒரு பாடமாக எடுத்துள்ளார். இந்த படத்திற்காக இயக்குனருக்கு தேசிய விருது கிடைக்கின்றதோ என்னமோ தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களிடம் இருந்து அவருக்கு பாராட்டு என்னும் விருது கண்டிப்பாக கிடைக்கும். அந்த விருது தேசிய விருதைவிட பெரியது என்பதை சொல்ல தேவையில்லை.

கவின் என்ற ஆண் குழந்தையும், நயினா என்ற பெண் குழந்தையும் வெவேறு இடத்தில் பிறக்கின்றன. இருவருக்குமே அதிகப்படியான திறமை காரணமாக வயதுக்கு மீறிய சேட்டைகள் கேள்விகள் பிறக்கின்றன. ஆனால் இது அந்த குழந்தைகளின் திறமையின் உச்சக்கட்டம் என்பதை அறியாமல், குழந்தைகளுக்கு ஏதோ குறை என்று தவறாக நினைத்து ஒவ்வொரு டாக்டராக பார்த்து சிகிச்சை அளிக்கின்றனர். பல பள்ளிகள் இந்த குழந்தையை வெறுத்து ஒதுக்கி டிசி கொடுத்து அனுப்பிவிடுகின்றனர். இந்நிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே அபார்ட்மெண்டில் குடிவருவதோடு, ஒரே பள்ளியிலும் படிக்கின்றனர். இருவருக்கும் ஒரே மாதிரியான டேலண்ட் என்பதால் இருவரும் நண்பர்களாகின்றனர். இதனால் பெற்றொர்களுக்கு பிரச்சனை இருமடங்காகிறது. ஒரு கட்டத்தில் குழந்தைகளின் தொல்லை பொறுக்க முடியாமல் இருவரையும் ஹாஸ்டலில் சேர்த்து விடுகின்றனர்.

இந்த நேரத்தில் சூர்யாவை சந்திக்கும் இந்த பெற்றோர்கள் அவரிடம் ஆலோசனை கேட்க, சூர்யா, இந்த குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை பெற்றோர்களுக்குத்தான் என்பதை புரிந்து கொண்டு இரண்டு பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து அவர்களை எப்படி மாற்றுகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்த படத்தின் உண்மையான ஹீரோ இயக்குனர் பாண்டியராஜ்தான். குழந்தைகளின் மனதை புரிந்து கொள்ள ஒரு குழந்தையாக மாறி எப்படிப்பட்ட காட்சிகள் இந்த படத்திற்கு வைக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய எவ்வளவு ஹோம் ஒர்க் செய்திருப்பார் என்பதை நாம் படம் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை போல வடிவமைத்துள்ளார். படத்திற்கு அவர் தேர்வு செய்த குழந்தைகள் படு சூப்பர். ஒவ்வொரு கேரக்டர் மூலமும், ஒவ்வொரு வசனத்தின் மூலம் நச்சென்ற ஒரு விஷயத்தை சொல்லி பார்வையாளர்களை அசர வைக்கின்றார்.

சூர்யாவுக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த படத்திலும் குழந்தைகளின் மருத்துவராக, குழந்தைகளின் ஆசிரியராக, அதே நேரத்தில் இரண்டு குழந்தைகளின் தகப்பனாக ஒரு நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை அளித்துள்ளார். குழந்தைகள் கவின் மற்றும் நயினா ஆகியோர் நாம ரெண்டு பேரும் பேரண்ட்ஸ்களை எக்சேஞ்ச் செய்துகொள்ளலாமா? என்று கூறுவதுபோல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் சூர்யா-அமலாபால் போல் ஒரு பெற்றோர் தேவை என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அமலாபாலுக்கு டீச்சர் கேரக்டர். ஒரு ஆசிரியர் பாடம் மட்டும் சொல்லிக்கொடுக்க கூடாது, குழந்தைகள் எதில் திறமையாக இருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்து, அந்த திறமையை வளர்க்க வேண்டும் என்ற மெசேஜை தன்னுடைய கேரக்டர் மூலம் அழுத்தமாக கூறியுள்ளார்.

கவின், நயினா இரண்டு குழந்தைகளின் நடிப்பும் மிக அபாரம். காக்கா முட்டை படத்திற்கு பின்னர் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் கிளைமாக்ஸில் இந்த படத்தின் இரண்டு மணி நேர கதையை இரண்டே நிமிடங்களில் நயினா ஸ்டேஜில் உருக்கத்துடன் குருவிக்கதை மூலம் சொல்லும்போது கண்ணில் நீர் எட்டிப் பார்க்கின்றது.

பிந்துமாதவியும், வித்யா பிரதீப்பும் இருகுழந்தைகளின் தாயாக நடித்துள்ளனர். நடிப்பில் இருவரிடமும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. கார்த்திக் குமாரும், ராம்தாஸும் குழந்தைகளின் தந்தையாக நடித்துள்ளனர். நடிப்பு ஓகே.

'குழந்தைகள் எப்போதுமே கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள். கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுவார்கள்

குழந்தைகள் மந்தமாக இருக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டாம். சாந்தமாக இருக்கின்றார்கள் என்று சொல்லுங்கள்

குழந்தைகளுக்கு problem இல்லையென்றால்தான் problem. problem இருந்தால்தான் அதுதான் சரியான குழந்தை

நாங்க நல்ல ஸ்கூலை நம்பறவங்க இல்லை. எங்கள் பிள்ளைங்களை நம்புறவங்க..

போன்ற நச் வசனங்கள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்று படத்திற்கு வலு சேர்க்கின்றது.

பாலசுப்பிரமணியனின் கேமராவில் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றன. குழந்தைகள் ரசிப்பதற்கு என்றே ஆங்காங்கே அனிமேஷன் காட்சிகளும் வருகிறது. இசை அரோல் கரோலி. பாடல்கள் சுமாராக இருந்தாலும், காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை.

குழந்தைப் பருவம் என்பது அப்பாவுடனும் அம்மாவுடன் விளையாடும் மகிழ்ச்சி கலந்த பருவம். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை அறைக்குள்ளேயே அடைத்து வைக்கின்றார்கள். அவர்களுடன் மனம்விட்டு பேசுவதில்லை. வெளியேயும் விடுவதில்லை. இதனால் அவர்கள் மனநிலை மாறுகிறது. எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளுக்கு என தினமும் சிலமணி நேரங்களை ஒதுக்கி அவர்களுடைய மனநிலையை மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை எல்லோர் மனதிலும் பதியும்படி அழுத்தமாக கூறியுள்ளார் பாண்டியராஜ்.

பில்கேட்ஸ், மைக்கேல் ஜாக்சன், கிருஷ்ணர் ஆகியோர் எல்லாம் குழந்தைகளாக இருக்கும்போது அதிகப்படியான சேட்டைகள் செய்தவர்கள்தான். ஆகையால் குழந்தைகளின் Hyperactivityஐ நோயாக நினைக்காமல் அதை அவர்களுடைய அதிகப்படியான திறமை என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை புரிய வைப்பதே இந்த படம் இந்த படத்தில் இருக்கும் சின்னச்சின்ன குறைகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதில் மேதாவி என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

மொத்தத்தில் 'பசங்க-2 ஒரு படமல்ல..பாடம்

More News

நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்

நயன்தாரா நடித்த 'மாயா' படத்தை அடுத்து இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் படம் ஒன்றில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளார் ...

'பசங்க 2' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்திலும் பிந்துமாதவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களிலும் நடித்த 'பசங்க 2' ...

'கெத்து' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

ஒருகல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள அடுத்த படம் 'கெத்து'...

சன்னிலியோன் கணவர் மருத்துவமனையில் அனுமதி

கனடா நாட்டின் ஆபாச பட நடிகையும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான சன்னிலியோனின் கணவர் டேனியல் வெபர்...

சிம்புவின் பீப் பாடல் குறித்து சுஹாசினி மணிரத்னம் கருத்து

சிம்பு பாடியுள்ளதாக கூறப்படும் 'பீப் பாடலால் தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....