ரஜினியை தவறாக பேசினாரா பார்த்திபன்? இதோ ஒரு விளக்கம்
- IndiaGlitz, [Monday,August 07 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல அரசியல்வாதிகளும் ஒருசில திரையுலகினர்களும் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி ரஜினிகாந்த் சென்று கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பார்த்திபன், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி அந்த கடவுளிடம் தான் கேட்க வேண்டும்" என்று கலகலப்பாக பதில் சொன்னார். இந்த கருத்தை பார்த்திபன் கலகலப்பாக கூறியிருந்தாலும் ரஜினி ரசிகர்கள் இதை சீரியஸாக எடுத்து கொண்டதால் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
இதனையடுத்து பார்த்திபம் விளக்கம் அளித்து கூறியதாவது: "உலகநாயகன் கமல்ஹாஸன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் நான். அதிலும் குறிப்பாக ரஜினி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பரும் கூட. பாபுஜி என்கிற தயாரிப்பாளரிடம் 'பார்த்திபனை கதாநாயகனாக்கி படம் தயாரியுங்கள்' என்று கூறியவர். நான் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து பாராட்டியவர். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் மாற்று கருத்து இருந்தாலும் அவர் என்னை வெறுக்கமாட்டார் சமீபத்தில் நான் அளித்த பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வைத்து என் நகைச்சுவை கலந்து ரசிக்க கூறினேனே தவிர அவரது ரசிகர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படி தவறாக கூறி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் அவருக்கு இருக்கும் கோடான கோடி ரசிகர்களின் மத்தியில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்". என்று கூறினார்.