அமெரிக்காவை கூட காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவை... பார்த்திபன்!
- IndiaGlitz, [Friday,April 17 2020]
தமிழகம் உள்பட இந்தியாவில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மே 3ஆம் தேதிக்கு பின் ஒருசில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் விடுத்த வேண்டுகோள் பின்வருமாறு:
ஊரடங்கை தளர்த்த வேண்டாம். மக்கள் மே 3 வரை மனரீதியாக எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள், இப்படியே இருக்கட்டும். வேண்டுமானால் மிக அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் சில விஷயங்களை கையில் எடுங்கள். ஐடி போன்ற நிறுவனங்களுக்கு தளர்த்த வேண்டாம். 50 பேர் வேலைக்கு செல்கிறார்களா? 500 பேர் வேலைக்கு செல்கிறார்களா? என்று எப்படி தெரியும்
இன்னும் நாம் 3ம் கட்டத்திற்கு செல்லவில்லை. அப்படி நாம் சென்றால், அமெரிக்காவை கூட காப்பாற்றி விடலாம் இந்தியாவை காப்பாற்றவே முடியாது என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறியதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.