'டீன்ஸ்' படத்திற்கு 100 ரூபாய் டிக்கெட்.. பல்டி அடித்தாரா பார்த்திபன்?

  • IndiaGlitz, [Thursday,July 11 2024]

நடிகர் பார்த்திபன் இயக்கிய ’டீன்ஸ்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு 100 ரூபாய் தான் கட்டணம் என்றும் பார்த்திபன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது டிக்கெட் கட்டண விஷயத்தில் பார்த்திபன் திடீரென பல்டி அடித்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவ தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:

100 ரூ +ஜிஎஸ்டி etc விலையில் டிக்கெட் என் விருப்பம்.விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதித்த பின்னே இம்முடிவு.இருப்பினும் சில இடங்களில் முன் பின் இருக்கும். பொறுத்தருள்க! ரிசர்வேஷன் துவங்கிவிட்டது. இன்று Thursday ஆகிவிட்டது,
நாளை TEENZ day ஆக்குங்கள்

’டீன்ஸ்’ திரைப்படத்திற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே 100 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி என இருப்பதாகவும் பல திரையரங்குகளில் வழக்கம் போல் கிட்டத்தட்ட 200 ரூபாய் கட்டணம் தான் காண்பிப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைத்தால் அதிக ஆடியன்ஸ்கள் வருவார்கள், அந்த படமும் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 100 ரூபாய் கட்டணம் என்று அறிவித்துவிட்டு அதன் பின்னர் பார்த்திபன் பல்டி அடித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பார்த்திபன் சொன்னபடி சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் படம் நன்றாக இருந்தால் நாங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுத்து படம் பார்க்க தயார் என்று பல ரசிகர்கள் பார்த்திபனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பார்த்திபனின் ’டீன்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் எந்த விதமான வரவேற்பை பெறும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.