சலூன் கடைக்காரரின் மகளான கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்த்திபன்
- IndiaGlitz, [Thursday,May 14 2020]
மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் தனது மகளின் மேற்படிப்பிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அந்த சலூன் கடைக்காரரின் மகளுக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகளின் மேல் படிப்பிற்காக சிறுக சிறுக சேமித்து ரூபாய் ஐந்து லட்சம் வரை வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனது பகுதியில் இருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியும் பட்டினியுமாக இருப்பதை பார்த்து மனம் வருந்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் தனது மகளின் அனுமதியோடு மகளுக்காக சேர்த்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சம் பணத்தை அங்கு உள்ள 6 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். சேமிப்பு முழுவதும் கரைந்தாலும் அவர் இது குறித்து கவலைப்படாமல் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பசியாற உண்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இதனை அறிந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது உதவியாளரை அனுப்பி சலூன் கடைக்காரர் குடும்பத்திற்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை, கொடுத்து மரியாதை செய்து பெருமைப்படுத்தினார். அது மட்டுமின்றி அவருடைய மகளின் கல்லூரி செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வேறு எந்த உதவியும் தன்னிடம் கேட்கலாம் என்றும் நடிகர் பார்த்திபன் கூறியிருப்பது உண்மையிலேயே சலூன் கடைக்காரரின் மகளுக்கு இன்ப அதிர்ச்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது.