'96' படக்குழுவுக்கு பார்த்திபன் கொடுத்த '96' பரிசு

  • IndiaGlitz, [Tuesday,February 05 2019]

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமாகவும் கவிதைத்தனமாகவும் சிந்திக்க கூடியவர். எந்த சினிமா விழாவாக இருந்தாலும் அவருடைய பேச்சில் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற '96' படத்தின் 100வது நாள் விழாவில் பார்த்திபன் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக விஜய்சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து இந்த படத்தின் வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் நடிக்க வைத்தார்

இந்த நிலையில் '96' படக்குழுவினர்களுக்கு ஒரு வித்தியாசமான பரிசையும் அவர் வழங்கியுள்ளார். '96' படத்தை குறிக்கும் வகையில் 9 மற்றும் 6 எண்களை மட்டுமே கொண்ட ஒரு கடிகாரத்தில் 'காதலுடன் உங்கள் பார்த்திபன்' என்று எழுதி படக்குழுவினர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த பரிசு படக்குழுவினர்களுக்கு ஒரு மறக்க முடியாததாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த பரிசு குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்.... 'ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்' என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96' என்று கூறியுள்ளார்.