'டீன்ஸ்' படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா? விமர்சகர்களை கேள்வி கேட்கும் பார்த்திபன் நண்பர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பார்த்திபன் நடித்த ’டீன்ஸ்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின. இந்த நிலையில் ’டீன்ஸ்’ படத்தை எடுக்க உதவிய தனது நண்பர் தமிழரசன் என்பவரின் பேஸ்புக் பதிவை பார்த்திபன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’டீன்ஸ்’ படத்தில் விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் இதையெல்லாம் கவனித்தீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அந்த பதிவு இதோ:
ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பை உருவாக்குவதில் எவ்வளவு, பொறுப்பும், கடமையும் இருக்கிறதோ, அதே அளவு பொறுப்பும், கடமையும் அதை விமர்சிக்கிற விமர்சகருக்கும் உள்ளது என்பதை ஊடக விமர்சகர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அதுவே அறமாகும்.
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் " ’டீன்ஸ்’ " படத்தின் விமர்சனங்கள் பற்றி குறிப்பிட வேண்டும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு திரைவிமர்சனங்கள் ஒரு கணிசமான பங்களிப்பைச் செய்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.
அதே சமயம், விமர்சகர்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் தன்மைக்கும், பார்வையாளர்கள் இந்த திரைப்படத்தைப் பார்க்கும் தன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
பார்வையாளன் நக்கீரனின் மனநிலையோடு ஒரு திரைப்படத்தை அணுகுவதில்லை. அந்த திரைப்படம் தன்னை ஈர்க்கிறதா இல்லையா? என்கிற கண்ணோட்டத்தில் மட்டும் தான் அவன் பார்க்கிறான். கொண்டாடுகிறான். ஈர்ப்பு இல்லை என்றால் தயவு தாட்சண்யமின்றி புறக்கணிக்கவும் செய்கிறார். ஒரு நுகர்வோர் என்கிற முறையில் அதைத் தவறு என்று சொல்ல முடியாது.
அதே சமயம் விமர்சகர்கள் ஒரு படைப்பை விமர்சிக்கும் போது சமூகப் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அதை அவர் உதாசீனப்படுத்தி விட்டுத் தன் இஷ்டப்படி எழுத முடியாது. எழுதவும் கூடாது.
பொதுவாக எல்லா திரைப்பட விமர்சகர்களும் பொறுப்புணர்வின்றி விமர்சிக்கிறார்கள் என்று நான் குறிப்பிட வில்லை. பல நல்ல விமர்சகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் டீன்ஸுக்கு சரியான விமர்சனங்களையும் வழங்கி வருகிறார்கள். இது அவர்களைப் பற்றிய விமர்சனம் அல்ல.
" ஒரு நல்ல திரைப்படம் என்பது, ஏற்கனவே மக்களிடம் நிலவுகிற உணர்வுத் தன்மையை மேலும் ஒரு படி மேம்படுத்துவதே அன்றி வேறில்லை."
அந்தக் கண்ணோட்டத்தில் தான் ’டீன்ஸ்’ விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி.
இது Nope என்ற ஆங்கிலப் படத்தின் Inspiration ல் எடுக்கப்பட்ட படம் என்றும் அதை inspired by Nope என்று குறிப்பிடவில்லை என்றும் ஒரு ஊடகவியலாளர் தன் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் ’டீன்ஸ்’ ஐடியா உருவானது ஒரு பகலில் வெட்ட வெளியில் நடக்கும் போது பார்த்திபன் ஸார், " நாம் பேசிக்கொண்டே போகிறோம். சட்டென்று வேறு ஒருவருடன் பேசி விட்டுத் திரும்பிப்பார்க்கும் போது நீங்கள் காணாமல் போய்விட்டால் எப்படி இருக்கும் " என்று என்னிடம் கேட்டார். ரொம்பவும் த்ரில்லிங்காகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறதே என்று நான் வியந்தேன். அதன் பின் அவர் சொன்ன அந்த ஒன்லைன் டெவலப் செய்யப்பட்டு அதுவே ’டீன்ஸ்’ ஆக உருவெடுத்தது.
எனவே, புதிய முயற்சியை யார் முன்னெடுத்துக் செய்தாலும் அது ஹாலிவுட்டில் தான் நிகழ்ந்திருக்கும் என முன் தீர்மானம் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.
* இரண்டாவதாக,
’டீன்ஸ்’ படத்தின் முதல் பாதி ஜானர் ஹாரர் / த்ரில்லர் போலவும், இரண்டாம் பகுதி முற்றிலும் மாறாக ஒரு அறிவியல் ஜானராகவும் உள்ளது என்றும், ஒரு சில விமர்சகர்கள் அதை ஒரு குறை போல் குறிப்பிட்டிருந்தார்கள்.
திரைக்கதை கூர்ந்து கவனிக்கப்பட்டிருந்தால் இரண்டாம் பாதி விஞ்ஞானத்தை நோக்கிச் செல்லும் என்பதற்கான " க்ளு " முதல் பாதியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விஞ்ஞானத்தில் ஆர்வம் உள்ள ஒரு டீன் கேரக்டர் இன்று ஏழு கோள்கள் ஒரே வரிசையில் வருகிறது என்று தன் சக நண்பர்களுக்குத் தன் டெலஸ்கோப் மூலம் காட்டுவான்.
*அந்த இரவு ஒரு பெரும் பேரிரைச்சலுடன் ஒரு ஸ்பேஷ் ஷிப் வந்து ஒரு ஏரியில் இறங்குவதைப் பூடகமாக காண்பித்திருப்பார்கள்.
* மேலும், ’டீன்ஸ்’ பேருந்து வழியில் நிறுத்தப்பட்ட போது ஆட்டோ டிரைவரிடம் பாட்டி வீட்டிற்கு வழி கேட்டு வரும் பொழுது அவர்கள் ஆஸ்ட்ரோ ஃபிஸிஸ்ட்டின் ஆய்வுக்கூடத்தை கடந்து வருவதாகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் திரைக்கதை மீது குறை சொல்ல முற்பட்ட எந்த விமர்சகர்களும் குறிப்பிடவில்லை.
* மூன்றாவதாக, படத்தின் ஹீரோவாகக் காண்பிக்கப்படுகிற சிறுவனுக்கு கேரளாவின் தலித் போராளியான அய்யங்காளி என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும். அவன் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாகக் காட்டப்பட்டிருப்பதன் மூலம் இன்றைய சமூகத்தின் அவல நிலை மாறாமலிருப்பதை இயக்குநர் வெளிப்படுத்தியிருப்பார். அது பாராட்டத்தக்கது.
* நான்காவதாக, சிறுவர்கள் வந்த பேருந்து வழியில் தடைபட்டு நிற்பதற்கான காரணமாக ஒரு ஆணவப் படுகொலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை முன் வைத்திருப்பார் இயக்குநர். ஒடுக்கப்பட்ட இனம் காலம் காலமாக நீதி மறுக்கப்பட்ட நிலையில் தான் இருந்து வருகிறது என்பதையும் இந்தக் காட்சியின் மூலம் காட்டியிருப்பார். இந்த ஆணவக் கொலையில் கொல்லப்பட்ட பெண்ணைத் தான் ஆதிக்கவாதிகள் மரத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பதையும் பூடகமாக உணர்த்தியிருப்பார்.
* ஐந்தாவதாக, பதின்பருவ மாணவ மாணவிகளிடையே காதல் என்பது தவிர்க்க முடியாதது. அதை மூடி மறைத்து பொய்யாகத் தன் படைப்பை இயக்குநர் கொண்டு செல்ல விரும்பவில்லை. அவர் அதை அளவோடு, வானவில்லை தொடும் அந்தச் சிறுவனின் உணர்வை இலக்கியத் தரத்தில் காண்பித்திருப்பார்.
* ஆறாவதாக, விடலைப் பருவம் தவறோ, சரியோ எதையும் செய்து பார்த்து விடும் வேகம் மிக்கது என்பதை ’டீன்ஸ்’ படத்தில் ஒரு சிலர் மட்டும் " கள் " பருகுவதில் காண்பித்திருப்பார். இந்த எதார்த்தத்தை விட்டு விட்டு இயக்குநர் பொய்யாகக் கடந்து செல்லவில்லை என்கிற வகையில் படைப்புக்குண்டான நேர்மையை அவர் கடை பிடித்திருக்கிறார். அது பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த 13 டீன்ஸ்கள் தங்கள் இயல்பான நடிப்பால் நம் நெஞ்சைக் கொள்ளை கொள்வதும் ஒரு சிறப்பு அம்சமே.
* ஏழாவதாக, அத்தனை சிறுவர்களுக்காகவும் தன்னை Sacrifice செய்து கொண்டு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக ஒரு சிறுவன் செல்கிறான் என்பதன் மூலம் தன் படைப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநரை உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டும் என்பதே சரி. எந்த விமர்சகராவது இந்தப் படத்தில் இப்படி ஒரு அரசியல் பின்னணி இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு இருந்தால் படைப்பாளிக்கு அது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். அப்படி எந்த விமர்சகரும் நுட்பமாக படத்தை அணுகவில்லை என்பது வருத்தத்துக்குரியது தான்.
* எட்டாவதாக, Golden Disc ல் எல்லா மொழிகளும் இடம் பெற்றிருக்க, உலகத்தின் மூத்த மொழியான தமிழ் மட்டும் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் அரசியலை முன் வைத்து, நான் ஒரு தங்கத் தமிழனையே அனுப்பி வைக்கிறேன் என்று அனுப்பி வைத்தது அவருடைய படைப்பில் அவர் பதித்திருக்கும் Golden முத்திரை என்று தான் சொல்ல வேண்டும்.
இறுதியாக, அடிதடி சண்டை, என்று மக்களைப் பிளவு படுத்தி கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒரு நல்ல திரைப்படம் வரும் பொழுது கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி குற்றம் கண்டு பிடிப்பதைத் தவிர்த்து, அதில் உள்ள நல்ல விஷயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த நாம் அனைவருமே கடமைப்பட்டிருக்கிறோம் என்பதுடன், இப்படிப் பல சிறப்புக்களை கொண்ட ஒரு அரிய படைப்பைத் தந்தமைக்காக எழுத்தாளரும், நடிகருமான, இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களை பாராட்ட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
நண்பர்களே!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 20, 2024
சில விமர்சனமும்,பலமிகு வெகுசனமும்
முதல்நாளும் அடுத்தடுத்த நாளுமாய் வேறுபட்டு
சிறிதாய் வருவாய் வரக் காரணமானது. மீண்டும் இரவெல்லாம் உறங்காமல் அடுத்தென்ன செய்வது? செய்வதா? என்றெல்லாம் யோசனையில் மூழ்கியபோது ‘TEENZ’ உருவாகுகையில் உடனிருந்து உதவிய நண்பர் திரு தமிழரசன்… pic.twitter.com/DAKawJpN2N
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments