சினிமாவில் சாதிக்க முடியாதவர்களால் தோல்வி அடையும் திரைப்படங்கள்.. பார்த்திபன் ஆதங்கம்..!

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள், ஒரு கேமராவை தூக்கி வைத்து, விமர்சனம் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும், அந்த வகை வீடியோக்களே சின்ன பட்ஜெட் படங்கள் தோல்வியடைய காரணம் என்றும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா விமர்சனம் என்பது முன்னணி பத்திரிகைகளில் வெளியாகும் என்பதும், அந்த விமர்சனங்கள் ஒரே நபரின் கருத்தாக இல்லாமல், விமர்சன குழு என்ற அமைப்பின் கருத்துக்களாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த குழுவினர் தரும் கருத்துக்கள் ஒன்றிணைந்து, சினிமா விமர்சனமாக பத்திரிகையில் வெளியிடப்படும். மேலும், பாரபட்சமின்றி நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்; அத்தகைய விமர்சனங்களை நம்பி, மக்கள் படம் பார்க்கலாம் என்று கூறப்படுவதும் உண்டு.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஒரு மொபைல் போன் இருந்தால் போதும், உடனே அவர் சினிமா விமர்சகராக ஆகிவிடுகிறார்கள். தனிப்பட்ட கருத்துகள் மற்றும் வெறுப்புகளை சினிமா விமர்சனம் என்ற பெயரில் பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னணி நடிகர்களின் படங்களை வேண்டுமென்றே சிலர் கேலி செய்து விமர்சன செய்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் சினிமா விமர்சகர்கள் குறித்து கூறியபோது, திரைப்பட விமர்சகர்கள் எந்தக் கோணத்தில் விமர்சனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு சினிமா பற்றிய அறிவு என்ன? புரியவில்லை. கிராமத்திலிருந்து வந்த நம் பார்வையில் சினிமாவை பார்க்கிறோம்.

சினிமாவில் சாதிக்க முடியாமல், தோல்வி அடைந்தவர்கள், ஒரு கேமிராவை வைத்து கொண்டு விமர்சகராக மாறியிருக்கிறார்கள். ஒரு படத்தின் குறைகளை சொல்வது தவறு இல்லை. அனைத்து படங்களையும் பாராட்ட வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட விமர்சனம் 13 குழந்தைகளுக்கிடையே வேறுபாடில்லை என எனது படம் குறித்து விமர்சனம் கூறியது என் மனதை காயப்படுத்தியது என்று தனது ஆதங்கத்தை நடிகர், இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.