கீழடியில் 21 அடுக்குக் கொண்ட உறை கிணறு... வெட்ட வெளிச்சமான தமிழர் நாகரிகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகங்ககை மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நாகரிகத்தின் காலகட்டம் 2,200 ஆண்டு பழமையானது எனக் கூறப்பட்ட நிலையில் தமிழரின் நாகரிகத்தை கி.மு.6 நூற்றாண்டிற்கு பின்னோக்கிப் பார்க்கும் வகையில் பல்வேறு பொருட்கள் கீழடியில் கிடைத்தன. அந்தப் பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃப்ளோரிடா மாகாணத்தின் பீட்டா அனலடிக்கல் லேப் கீழடி நாகரிகம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது எனச் சான்றளித்தது.
அந்தவகையில் மத்தியத் தொல்பொருள் ஆய்வுக் கழகம் கீழடியில் ஆய்வை நிறுத்திய போதும் மாநில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கிழடியில் 6 ஆம் கட்ட சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனத்தின் அகரம், கொந்தகை, மணலூர், கீழடி போன்ற பகுதிகளில் தற்போது 6 ஆம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. அந்த ஆய்வில் கடந்த 22 ஆம் தேதி அகரம் பகுதியில் 17 அடுக்குக் கொண்ட உறை கிணறு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் வெளியானது.
தற்போது அப்பகுதியில் மீண்டும் மேற்கொண்ட ஆய்வில் மேலும் அதே கிணற்றில் 4 அடுக்குகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அகரம் பகுதியில் 21 அடுக்குகளைக் கொண்ட உறைக் கிணற்றுப் பகுதி முழுவதுமாக வெளியே காட்சி அளிப்பதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தக் கிணற்றின் காலம் மற்றும் அதைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாக வில்லை. ஆனால் கிணற்றின் ஒவ்வொரு உறை பகுதியும் முக்கால் அடி உயரம் மற்றும் 2 அரை அடி அகலம் கொண்டதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கீழடி நாகரிக மக்கள் அந்தக் காலக்கட்டங்களில் நீரைச் சேமித்து வைப்பதற்கு இந்த முறையைப் பயன்படுத்தி இருக்கலாம். மேலும் விவசாயப் பணிகளில் முன்னேற்றம் கொண்ட தமிழரின் நாகரிகம் இதில் வெளிப்பட்டு உள்ளது என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments