இரண்டாம் பாக படங்களும் இடத்தை நிரப்பும் குப்பைகளும்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றி பெற்ற ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நடைமுறை. தமிழில் திடீரென உருவாகும் சில ட்ரெண்டை போல, இப்போது இந்த இரண்டாம் பாக விஷயமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பு எதற்காக ஒரு படத்தை இரண்டாம் பாகம் எடுக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை முதலில் பார்த்துவிடுவோம்.
1. ஒரு படம் வெளியாகி வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதோடு மட்டுமில்லாமல், அந்த படம் ஒரு ப்ராண்டாக மாறும் அளவிற்கு அதில் கன்டென்ட் இருந்தால் அதற்கான இரண்டாம் பாகம் எடுக்கலாம். (உதாரணம் அவதார்,டெர்மினேட்டர்,ஸ்டார் வார்ஸ் )
2. படத்தின் முக்கிய கதாபாத்திரம் (ஹீரோ அல்லது ஹீரோயின் அல்லது வில்லன் அல்லது ஒரு நாய்) எந்தளவிற்கு மக்களை ஈர்க்கிறது என்பதும், அந்த கதாபாத்திரத்தின் உடல்மொழியும், பாத்திரம் பேசிய வசனங்களும், அதன் கொள்கைகளும், நோக்கங்களும் யுனிக்-காக இருக்கும்பட்சத்தில், அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து இரண்டாம் பாகம் எடுக்கலாம். (ஜேம்ஸ்பாண்ட் படங்கள்)
3. உண்மையிலேயே ஒரே பாகத்தில் முழுக்கதையையும் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில், முதல் பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான அவசியத்தையும், அதற்கான தேவையையும் தெளிவாக உணர்த்தியிருந்தால், முதல்பாகம் ஓடியதோ இல்லையோ, தாராளமாக இரண்டாம் பாகம் எடுக்கலாம். (லார்ட் ஆப் தி ரிங்ஸ் வகையறாக்கள். தமிழில் இப்போது வந்த வடசென்னை)
4. மேற்கண்ட எந்த காரணமும் இல்லாமல், முதல்பாகம் நன்றாக ஓடியது என்கிற ஒரே ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மினிமம் கேரண்டி என்கிற அடிப்படையில், அதே கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, கொஞ்சமே கொஞ்சம் கதையில் மாற்றம் செய்து, இரண்டாம் பாகம் எடுக்கலாம். முதல் பாகம் வெற்றி படம் என்கிற ஒற்றை காரணம் மட்டுமே இதில் முதன்மையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (சிங்கத்தில் ஆரம்பித்து, சாமி வரை)
தமிழில் வெற்றி பெற்ற முனி திரைப்படமே இந்த ட்ரெண்டை முன்னெடுத்து செல்ல உதவிய படம் என்று கூறலாம். அதற்கு முன்னர் தமிழில் கமலஹாசனின் கல்யாணராமன் மற்றும் ஜப்பானில் கல்யாணராமன் போன்ற படங்கள் வந்திருந்தாலும் கூட எப்போதேனும் ஒரு படம்தான் இப்படி உருவாகும். அதிலும் கூட இரண்டாம் பாகம் எடுக்கப்படும் படங்கள் நன்றாக ஓடாது என்கிற சென்டிமென்டும் தமிழ் சினிமாவில் இருந்ததால் பெரும்பாலும் இந்த முயற்சிகள் நடைபெறவேயில்லை எனலாம். ஆனால் முனியின் இரண்டாம் பாகமான காஞ்சனா முனியை விட மிகவும் நன்றாக ஓடி வசூல் செய்ய, தமிழில் இரண்டு விஷயங்கள் ட்ரெண்டாக மாறியது. ஒன்று வரிசையாக பேய்ப்படங்களாக எடுத்து தள்ளினார்கள். இரண்டாவது ரெண்டாம் பாகம் எடுப்பது அப்படி ஒன்றும் பெரிய பாதகமில்லை என்கிற முடிவுக்கு வந்தார்கள்.
ஹாலிவுட்டில் நீண்ட சரித்திரம் கொண்ட இந்த இரண்டாம் பாக படங்களை பார்த்து 2000 வருடம் வாக்கில் பாலிவுட்டில் இந்த வியாதி தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. நிறைய பழைய படங்களை தோண்டி எடுத்து இரண்டாம் பாகம் எடுக்க தொடங்கினர். அதில் அப்போது வெளிவந்த தூம் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பலமடங்கு வசூலையும், பெயரையும் பெற்றுத்தர மொத்த பாலிவுட்டும் இரண்டாம் பாகங்களின் பின்னால் ஓடி தொடங்கினர்.தமிழிலும் இதேதான் நிகழ்ந்தது. மறுஜென்ம கதைகளை எடுத்தால் ஓடாது என்கிற நம்பிக்கையைப்போலவே இருந்த இரண்டாம் பாக விஷயம் திடீரென உடைந்தது. உடைந்த அணையில் இருந்து வெள்ளமென படங்கள் வெளியாக ஆரம்பித்தது.
2013-ல் வெளிவந்த சிங்கம் இரண்டாம் பாகமும் மிக நல்ல வசூலை ஈட்ட, இரண்டாம் பாகங்கள் கொடுக்கும் மினிமம் கேரண்டி என்கிற விஷயம் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வலைவிரிக்க ஆரம்பித்தது. அதில் கொத்து கொத்தாக வஞ்சிரம் மீனைப்போல் மாட்டிக்கொள்ள தொடங்கினர். ஆனால் அவர்கள் மறந்த ஒரு விஷயம் என்னவென்றால், முதல் பாகத்திலேயே பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு எந்தவித கதையும் இல்லாத படங்கள்தான் அவைகள். அதை நம்பி இரண்டாம் பாகம் எடுக்க இறங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அவர்கள் உணரவில்லை.
முனி படம் மிகவும் எளிமையான கதையை கொண்டது. ஒரு பயந்தாங்கொள்ளி ஒருவன் உடலில் பேய் புகுந்து தனக்கு அநியாயம் செய்தவர்களை பழிவாங்கும் கதை. இதுவரை வந்த மூன்று படங்களிலும் இதே கதைதான். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளை மட்டும் மிகவும் வலுவாக வைத்துவிட்டு, மற்ற நேரங்களில் நகைச்சுவை மூலம் ஒப்பேற்றுவதுதான் ஃபார்முலா. இந்த ஃபார்முலா நல்ல வெற்றியடைய, அரண்மனை என்கிற சுந்தர்.சியின் படத்தையும் அவர் இரண்டாம் பாகம் எடுத்தார். அரண்மனையே சந்திரமுகி படத்தின் நகலை கொண்டதுதான். பின்னர் டார்லிங் என்கிற பேய்ப்படமும் கூட இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்த சுவடு தெரியாமலேயே பதுங்கிக்கொண்டது. இவ்வளவிற்கும் பேய்ப்படங்களின் ட்ரெண்ட் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வந்தும் இந்த படங்களால் கவனத்தை ஈர்க்கமுடியவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
ஏற்கனவே சிங்கம் படத்தை பற்றி நாம் பார்த்தோம். ஆக்ஷன் படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது மிகவும் எளிது. ஏனெனில் பெரும்பாலான ஆக்ஷன் படங்களின் கதைகள் ஒரேமாதிரியான தன்மையையே கொண்டவை. ஆங்கிலத்திலும் கூட ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கும், டை ஹார்ட் படங்களுக்குமான ஒற்றுமைகள் அதிகம். ஆனால் இரண்டுமே பல பாகங்கள் வெளிவந்த படங்கள். அதேபோல்தான் சிங்கமும். 1989-ல் வந்த க்ரோதம் படத்தின் இரண்டாம் பாகத்தை 2000-ஆம் ஆண்டில் பிரேம்குமார் மீண்டும் எடுத்தார். பிரேம்குமார் நடித்து ஓடிய அல்லது பரிச்சயமான ஒரே படம் க்ரோதம் மட்டுந்தான். அதை அவர் இரண்டாம் பாகம் எடுக்க நினைத்ததில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. முதல் பாகத்தில் எதிர்பாராமல் தீயவர்களை அழிக்க தொடங்கும் பிரேம், இரண்டாம் பாகத்தில் அவராகவே முன்வந்து காவல்துறைக்கு உதவுவது போன்ற ஒரு கதையை வைத்து எடுத்தார். உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையை கொண்ட இந்தப்படம் கவனிக்கப்படாமல் போனது துரதிர்ஷ்டமே. சொல்லப்போனால் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் சாயலும் கூட இதில் தென்படும்.
சண்டைக்கோழியின் இரண்டாம் பாகமும், சாமியின் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுமே எந்தவித முகாந்திரமும் இன்றி எடுக்கப்பட்ட இரண்டாம் பாகத்தை கொண்ட படங்கள். அதிலும் குறிப்பாக முதல் பாகத்தின் மேலிருந்த நன்னம்பிக்கையையும் கூட கெடுக்கும்வண்ணம் அமைந்ததை நாம் கவனிக்க வேண்டும். என்ன காரணம் என்றால் முதல் பாகத்தில் எதனால் எல்லாம் படம் பரவலான கவனத்தை பெற்றதோ அதை எல்லாம் இரண்டாம் பாகத்தில் ஒன்று சாகடித்தார்கள் அல்லது மறைத்துவைத்தார்கள். குறிப்பாக மீரா ஜேஸ்மின் கதாபாத்திரம் சண்டைக்கோழியில் மிகவும் முக்கியமானது. கீர்த்தி சுரேஷை அதே அளவிற்கு அந்த பாத்திரம் போல உலவ விட்டிருந்தாலும் கூட, காரணமே இல்லாமல் மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுத்துவிட்டு சென்றுவிட்டனர் என்று போகிற போக்கில் சொல்வதையெல்லாம் சாதாரணமாக எப்படி எடுப்பது?
அதேபோல் யாராலும் வெல்லமுடியாத ஆறுச்சாமி என்று பில்டப் கொடுத்துவிட்டு, சம்பந்தமே இல்லாமல் அவரை வில்லன்கள் கொல்வதும், விவேக்கை கூட விட்டுவைக்காமல் விபத்தில் இறந்துவிட்டதாக சொல்வதும் அபத்தத்தின் உச்சம் என்றே கூறலாம். இந்தமாதிரியான விஷயங்கள் எதை சுட்டிக்காட்டுகின்றன என்றால்,இரண்டாம் பாகத்திற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாத ஒரு படத்திற்கு மீண்டும் திரைக்கதை எழுதும்போது அந்த முதல் பாக கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எழுத வேண்டுமே அன்றி, அதே ஆட்களை வைத்து படமெடுக்க நினைத்தால், முதலில் முதல் பாகம் ஏன் வெற்றியடைந்தது என்பதை மனதில் கொண்டாவது திரைக்கதை எழுதுதல் அவசியம். இவை இரண்டுமே இல்லாததால் தான் இந்த படங்கள் முதல் பாகத்தின் பெயரையும் சேர்த்து கெடுக்கிறது. அதில் சண்டைக்கோழி கூட பரவாயில்லை. சாமி படமோ பார்ப்பவர் கண்ணை குத்தியதை மறக்கவே முடியாது.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் இதுவரை பார்த்த இரண்டாம் பாகங்களிலேயே சிறந்தது என்று கூறலாம்.காரணம் மேற்க்கூறிய சில இரண்டாம் பாக திரைக்கதை விஷயத்தை மிகச்சரியாக கையாண்டிருந்தார்கள். குறிப்பாக யாரால் எல்லாம் இரண்டாம் பாகம் நடிக்க இயலாதோ அல்லது யார் யார் இந்த கதைக்கு தேவையில்லையோ அவர்கள் இந்தப்படத்தில் இல்லாமல் போனதற்கான காரணத்தை நகைச்சுவையோடு ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவார்கள். அதேபோல் முதல்பாகத்தில் வந்த மறக்க முடியாத கதாபாத்திரங்களை சரியான இடங்களில் பயன்படுத்தி, திரைக்கதையை கலகலப்பாக்கி இருப்பார்கள். உண்மையில் இப்படியான விஷயங்கள்தான் இரண்டாம் பாகத்தில் இடம்பெற வேண்டும். அதுதான் முதல் பாகத்திற்கு செய்யும் நியாயமாக இருக்கும்.
அதேபோல் ஜெய்ஹிந்த் போன்ற படங்களை 20 வருடங்கள் கழித்து ரீமேக் செய்கையில் ஏற்படும் மிகப்பெரிய என்னவென்றால், தலைமுறை இடைவெளிதான். 1994-ல் இருந்த சமூக அமைப்பும், நெருக்கடிகளும் வேறு. இன்றைய காலகட்டத்தில் வேறு. இது சரியாக திரைக்கதையில் பிரதிபலிக்கவில்லை என்றால் படத்தின் தோல்வி உறுதி.அதுதான் அதுதான் இதில் நிகழ்ந்தது. அதேபோல் பில்லா படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்திற்கு முந்தைய கதை என்று கூறி எடுக்கப்பட்ட தமிழின் முதல் பிரிக்வல் படம் என்கிற சிறப்பை பெற்றாலும் கூட, திரைக்கதை தொய்வின் காரணமாக சரியாக ஓடவில்லை. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம், முதல்பாகம் வந்த சில மாதங்களில் வெளிவந்திருந்தால் ஒருவேளை பரவலான கவனம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து வந்ததால் ஏற்பட்ட அந்த இடைவெளியும், இரண்டாம் பாக கதையில் எந்தவித புது விஷயமும் இல்லாமல் போனதால் கவனிக்கப்படாமலேயே போனது.
எனக்கு தெரிந்து தமிழில் இரண்டாம் பாகம் எடுக்க தகுதியான ஒரு படமாக எந்திரன் இருந்தது. உண்மையில் எந்திரனின் கதைக்களம் மிகப்பெரியது. தமிழில் இந்தமாதிரியான படங்கள் எடுக்கப்படுவதே ஒரு சாதனைதான். ஏனெனில் இதன் பட்ஜெட் அப்படிப்பட்டது. அதைவிட அதிகமாக மனித உழைப்பையும் நேரத்தையும் தின்னும் அசுரர்கள் போன்றது இந்தப்படம். 2.0 இதனாலேயே தனிப்பட்ட முறையில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டிய படங்களில் ஒன்றாக இருக்கிறது.அந்த எதிர்பார்ப்பை முழுக்க முழுக்க நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தில் ரசிக்கப்பட்ட ரெட் சிப் பொருத்திய சிட்டி கதாபாத்திரம் அதே நேர்த்தியோடு 2.0விலும் பயன்படுத்தப்பட்டிருந்த்து. அதுபோக எதிர்பாரா ஆச்சர்யமாக படத்தில் தோன்றிய 3.0வும் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. கதை அடிப்படையிலும் 2.0 தனித்து இருந்த காரணத்தால் ரசிகர்களை எளிமையாக கன்வின்ஸ் செய்ய முடிந்த்து. சிட்டி என்கிற அந்த ரோபோவை வைத்து எவ்வளவோ கதைகள் புனையலாம். தனிப்பட்டும் சரி, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சரி எடுப்பதற்கு தகுதியான களம் கொண்ட படம் இது. டெர்மினேட்டர், அவதார் போன்ற யுனிக் தன்மை கொண்ட கதை இது.
மேற்கண்ட நீண்ட பட்டியலை ஆராயும்போது வெற்றி, தோல்வி இரண்டும் சரிசமமாக கலந்தே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இதில் வெற்றிக்கான காரணத்தை தேடினால் அதில் முழுமுதற் காரணமாக இருப்பது திரைக்கதைதான். சிங்கம் படத்தில் முதல் பாகத்தில் நல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரகாஷ் ராஜ் வரும் காட்சிக்கு இணையாக, இரண்டாம் பாகத்தில் சூர்யா மீண்டும் காவல்துறை அதிகாரியாக சார்ஜ் எடுத்துக்கொள்ளும் காட்சி அமைந்தது. காஞ்சனா படங்களில் முதல் பாகத்தில் இருந்த அந்த நகைச்சுவை காட்சிகளுக்கு இணையாக இருந்த சில காட்சிகளும், பிளாஷ்பேக்கும் படத்தை காப்பாற்றின.
சில படங்களை நாமே மனதிற்குள் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்போம். அந்தவகையில் சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் வருவது சந்தோசம்தான். ஆனால் அதே நடிகர்களை வைத்து எடுக்காமல், வேறு வேறு ஆட்களை வைத்து அந்த படத்தை எடுத்ததில் வருத்தம்தான். ஏனெனில் காந்தி பாபு என்னதான் ஏமாற்றுபவனாக இருந்தாலும் கூட அவன் மனதிற்கு நெருக்கமான ஆளாக மாறியதற்கு காரணம் அவனது தோற்றம்தான். அதுபோக அவன் கோடிக்கணக்கில் மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓடும் வியாபார காந்தம் எல்லாம் இல்லை. மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்தும், அவர்களின் ஆசையை தூண்டும், அதன்மூலம் நமக்கு பாடம் கற்றுத்தரும் ஒரு மனிதன். அந்த எளிமைதான் சதுரங்க வேட்டை படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம். ஆனால் இரண்டாம் பாகத்தில் பிரமாண்டமாக எடுக்க நினைத்ததால் அது தானாகவே அந்நியமாவதை தடுக்க முடிவதில்லை.அதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை அது வளர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் ராஜ தந்திரம் என்றொரு படம் வெளிவந்து எதிர்பாராத வெற்றியை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் அதே குழுவை வைத்து எடுத்தார்கள். அந்தப்படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது இருக்கிறது. காரணம் முதல் பாகத்தில் அவர்கள் மீது ஏற்பட்ட அந்த நம்பிக்கை. அதேபோல் எடுக்க ஆரம்பித்து பாதியில் நிற்கும் 24 ஆம் புலிகேசி படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.
எதற்காக இரண்டாம் பாகம் எடுக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியை எல்லாம் கடந்து. "இதுவும் ஒரு ட்ரெண்ட்..அதனால் எடுக்கிறோம்" என்கிற மனப்பாங்கிற்கு திரையுலகினர் வந்துவிட்டதால் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கிறது. அதேநேரத்தில் முதல் பாக படத்தின் அருமை, பெருமையை மீண்டும் ஒருமுறை நாம் உணர இது காரணமாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் அதற்காக கொடுக்கப்படும் விலை மிகப்பெரியது. இனிமேலாவது வலுவான திரைக்கதையோடும், நம்பகத்தன்மையான இரண்டாம் பாக கதையோடும் இந்த படங்கள் அணுகப்பட்டால் இந்த ட்ரெண்ட் மிக நல்லதொரு மாற்றத்தை தரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Balasankaran Ganesan
Contact at support@indiaglitz.com