'பாரீஸ் ஜெயராஜ்' காமெடியை மிஸ் செய்த ஜெயராஜ்
சந்தானம் நடித்த ஏ1 என்ற திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் மீண்டும் சந்தானத்துடன் இணைந்த திரைப்படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. முந்தைய படம் முழுக்க முழுக்க காமெடியாக இருந்த நிலையில் இந்த படம் எப்படி என்பதை பார்ப்போம் வட சென்னையில் வாழும் கானா பாடகரான சந்தனம் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளின் காதலை பிரிக்க வழக்கறிஞர் ஒருவரை நாடுகிறார். அந்த வழக்கறிஞர் ஒரு சதி செய்து சந்தானத்தின் காதலை பிரிக்க, அந்த வழக்கறிஞர் தான் சந்தானம் தந்தை என்ற டுவிஸ்ட் உடன் கதை ஆரம்பமாகிறது
இதனையடுத்து சந்தானம் அனைகா சோதியை காதலிக்கின்றார். இந்த காதல் கிட்டத்தட்ட திருமணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த காதலையும் சந்தானத்தின் தந்தை பிரிக்க முடிவு செய்கிறார். ஏன் பிரிக்கின்றார்? என்ற காரணம்? என்பது இடைவேளையின்போது தெரிகிறது. தந்தையின் சதியையும் மீறி அனைகா சோதியை சந்தானம் திருமணம் செய்தாரா? சந்தானம் தந்தை ஏன் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்? என சிலபல டுவிஸ்ட்களுடன் படம் முடிகிறது
'நாராயணா எனக்கு எதுக்குப்பா பேக்ரவுண்ட மியூசிக்?, அர்ஜூன் ரெட்டிய மூணு டைரக்டர்கள் எடுத்துருக்காங்க. நீங்க எதை சொல்றீங்க? போன்ற பஞ்ச் வசனங்கள் ஆங்காங்கே வந்தாலும் சந்தானத்தின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படத்தில் காமெடி ரொம்ப கம்மி. சந்தானத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆன ஒன்லைன் காமெடியும் இந்த படத்தில் எடுபடவில்லை. பாட்டு, டான்ஸ், ஆக்சன் எல்லாம் ஓகேதான். ஆனால் சந்தானத்திடம் நாம் எதை எதிர்பார்த்தோமோ அது இல்லை என்பது ஒரு ஏமாற்றமே.
படத்தின் நாயகியான அனைகா சோதிக்கு நடிப்பு, காமெடியும் நன்றாக வருகிறது. கிளைமாக்ஸில் சந்தானத்தை ‘அண்ணா’ என்று கூறுவதும் அதற்கு சந்தானத்தின் ரியாக்சனும் ரசிக்க முடிகிறது.
படத்தை ஓரளவுக்கு பார்க்க வைப்பது சந்தானத்தின் தந்தை பிருதிவ் ராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகிய இருவரும் தான். இருவருமே காமெடியில் அசத்தியுள்ளனர். மொட்டை ராஜேந்திரன் ஒரு படி மேலே என்று சொல்லலாம். ‘குக் வித் கோமாளி’ தங்கதுரை காமெடியும் ஓகே.
ஹீரோ ஒரு கானா பாடகர் என்பதால் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் முழுவதும் கானா தான். அதிலும் கடைசி பாடலுக்கு சாண்டி நடனமாடுவது பார்வையாளர்களுக்கு கிடைத்த போனஸ். ஆர்தர் வில்சனின் கேமிரா ஓகே ரகம். எடிட்டர் பிரகாஷை குறை சொல்ல முடியாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
கடந்த 1967ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த 'ஊட்டி வரை உறவு' படத்தின் கதை தான் கிட்டத்தட்ட இந்த படத்தின் கதையும். ஆனால் அந்த படத்தில் இருந்த காமெடி முழுக்க முழுக்க இந்த படத்தில் மிஸ்ஸிங். சந்தானத்தை ஹீரோவாக வைத்து படமெடுக்க முடிவு செய்த இயக்குனர் ஜான்சன், சுத்தமாக காமெடியை மறந்துவிட்டாரோ, அல்லது அவர் காமெடி என நினைத்து எடுத்த காட்சிகளில் நமக்கு சிரிப்பு வரவில்லையா? என தெரியவில்லை. சந்தானத்தை அலட்டல் இல்லாமல் நடிக்க வைத்த ஒரே காரணத்திற்காக இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் ஒருசில டுவிஸ்ட்கள் மற்றும் சில காமெடி காட்சிகளுக்காக பார்க்கலாம்.
Comments