தோழி என்றாலே சர்ச்சைதானோ? தென்கொரிய அதிபருக்கு நேர்ந்த பரிதாப நிலை

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தோழியால் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியதாக கூறப்படும் நிலையில் தென்கொரிய பெண் அதிபர் பார்க் ஜியன் ஹை என்பவரும் தனது தோழியால் தன்னுடைய அதிபர் பதவியையே இழந்துள்ளார்.

தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையோடு கடந்த 2013ஆம் ஆண்டு பதவியேற்ற அதிபர் பார்ஜ் ஜியன் ஹை, தனது தோழி சோய் சூன் சில் என்பவரை தனது ஆலோசகராக நியமனம் செய்து கொண்டார்.

பதவியில் இருப்பவர்களுக்கு தோழிகள் என்றாலே சர்ச்சைதான் போலும். தோழி சோய் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதிபரின் பெயரை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அதிபர் மற்றும் அதிபரின் தோழிக்கு எதிராக தென்கொரியாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் விளைவால் அதிபரை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தனர்

இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 234 உறுப்பினர்களும், 56 பேர் எதிர்த்தும் வாக்களித்ததால் அதிபர் பார்ஜ் ஜியன் ஹை பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.