ஒடுக்கப்பட்ட மக்களின் கதை சொல்லும் இன்னொரு படம்
பா.ரஞ்சித் இயக்கும் படம் என்றாலும் தயாரிக்கும் படம் என்றாலும் அந்த படம் 'இனம்' குறித்து பேசும் படமாகவே இருக்கும். கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவர் தன்னுடைய சொந்த கருத்தை திணிக்கும் வழக்கம் உடையவர். 'பரியேறும் பெருமாள்' படத்திலும் அதேபோன்ற கதை என்பதால் ரஞ்சித் அவரே தயாரித்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்போம்.
கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேரும் கதிருக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது. இதனால் பேராசிரியர்களிடம் அவமானப்படும் கதிருக்கு உடன் படிக்கும் ஆனந்தி உதவுகிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, ஆனந்தி பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிகிறது. தங்கள் ஜாதியை விட குறைந்த ஜாதிக்காரரான கதிர் தங்கள் வீட்டு பெண்ணிடம் பழகுவதை கண்டித்து அவரை அடித்து உதைக்கும் ஆனந்தி வீட்டார், இனிமேல் அவருடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று எச்சரிக்கின்றனர். இதனால் விலகி விலகி செல்லும் கதிரை, வலிய வலிய பேசும் ஆனந்தியால் ஏற்படும் விபரீதம் என்ன? அந்த விபரீதத்தை கதிர் சமாளித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
முதல் காட்சியிலேயே தான் ஆசை ஆசையாய் வளர்த்த 'கருப்பி' என்ற நாயை, இன்னொரு ஜாதிக்காரர்கள் கொலை செய்வதால் அதிர்ச்சி அடைவது, கல்லூரியில் பேராசிரியரை டீச்சர் என்று கூப்பிடுவது, 'அம்மா சத்தியமா' என்று கள்ளங்கபடம் இல்லாமல் பேசுவது என கதிர் ஒரு முழு நடிகனாக முயற்சித்துள்ளார். அப்பாவை சக மாணவர்கள் வேட்டியை உருவி அவமானப்படுத்தும் காட்சியில் பொங்கி எழும் கதிர், அம்மாவிடம் இதுகுறித்து புலம்பும் காட்சி, கிளைமாக்ஸில் ஆனந்தியின் தந்தையிடம் பேசும் முதிர்ச்சியான காட்சிகளில் கதிர் மனதில் நிற்கிறார். ஆனால் இந்த படத்தின் பெரும்பாலான கேரக்டர்கள் நெல்லைத்தமிழ் பேசும்போது, இவர் மட்டும் வழக்கமான தமிழ் பேசுவது முரண்பாடாக உள்ளது. 'வாலே, போலே என்று பேசிவிட்டால் அது நெல்லைத்தமிழ் ஆகிவிடுமா?
ஆனந்தியின் கேரக்டர் சற்று அழுத்தமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த கேரக்டருக்கு அவர் பொருந்தாமல் உள்ளார். இவருடைய நடிப்பும் ஆஹா, ஓஹோ என்ற அளவில் இல்லை என்றாலும் ஓகே ரகம்.
ஆனந்தியின் தந்தையாக நடித்திருக்கும் ஜி.மாரிமுத்து மனதில் நிற்கிறார். வேற்று ஜாதி பையனை தனது மகள் காதலிக்கின்றாரோ என்ற சந்தேகத்தில் கதிரை நைசாக பேசி அழைத்து அதன் பின் எச்சரிப்பது, உன்னை மட்டுமில்லை, என் மகளையும் சேர்த்து கொன்னுடுவாங்க' என்று கதிரிடம் புலம்புவது, கிளைமாக்ஸில் கதிருடன் பேசும் அழுத்தமான வசனங்கள் என நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் ஆணவக்கொலை செய்யும் கேரக்டரில் நடித்துள்ள பெரியவர் கராத்தே வெங்கடேஷ் நடிப்பு சூப்பர். இவரை தமிழ் சினிமா இனிமேல் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.
யோகிபாபுவின் காமெடி முதல் பாதியை கலகலப்பாக்க வைத்திருக்க உதவுகிறது. ஒருசில காட்சிகளில் வந்தாலும் கதிரின் பெற்றோர்களாக நடித்திருக்கும் இருவரின் நடிப்பும் அருமை.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் கிராமத்து பாணி பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் நெல்லை மண்ணின் மணத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தொகுப்பாளர் செல்வா படத்தின் நீளத்தை கண்டிப்பாக குறைத்திருந்க்க வேண்டும்.
கதை நடக்கும் காலம் 2005 என்று டைட்டில் கார்டில் போட்டதில் இருந்தே இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும் இந்த ஜாதி பிரச்சனை தற்காலத்தில் படத்தில் காட்டும் அளவுக்கு வீரியமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். பியூன் பணியில் இருந்து ஜனாதிபதி பதவி வரை தாழ்த்தப்பட்டோர் முன்னேறி வரும் இந்த காலத்தில், எங்கோ ஒருசில இடங்களில் நடக்கும் ஆணவக்கொலையை பெரிதுபடுத்தியுள்ளார். அதேபோல் இரண்டு தரப்பிலும் உள்ள நியாய அநியாயங்களை சரிசமமாக நடுநிலையுடன் அலசாமல், உயர் ஜாதிகார்ர்கள் எல்லோரையும் வில்லன்கள் போல் சித்தரித்திருப்பதை ஏற்க முடியவில்லை. இந்த படத்தில் சட்டக்கல்லூரியின் பிரின்சிபல் ஒரு வசனம் பேசுகிறார். நம்மை அடிமைப்படுத்தியவர்கள், நம்மை பார்த்து கும்பிட வேண்டுமானால், நாம் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அப்படி செய்தால் நம்மை ஒதுக்கியவர்கள், நம்மை பார்த்து கும்பிடுவார்கள்' என்று கூறுகிறார். இந்த ஒரே ஒரு நல்ல கருத்தை கூற வேண்டும் என்பதுதான் இயக்குனரின் இலக்கு. இவ்வளவு அருமையான இந்த கருத்தை அழுத்தமான காட்சிகளில் சொல்லாமல் ஜவ்வாக படத்தின் நீளத்தை அதிகரித்துள்ளார். கடந்த ஐம்பது வருடங்களில் ஜாதி குறித்து வெளிவந்துள்ள பல திரைப்படங்களில் சொல்லாத எந்த புதுமையும் இந்த படத்தில் இல்லை என்பது ஒரு பெரிய குறை. கிளைமாக்ஸில் கதிரும் ஜி.மாரிமுத்துவும் பேசும் வசனங்கள் மட்டும் இயக்குனரின் ஹைலைட்.
மொத்தத்தில் சுமாராக பரிமாறப்பட்ட ஒரு நல்ல விருந்து.
Comments