குரூப்-1 தேர்வில் அறிமுக இயக்குனரின் வெற்றிப்படம் குறித்த கேள்வி: ஆச்சரியத்தில் திரையுலகினர்
- IndiaGlitz, [Sunday,January 03 2021]
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ’பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி நடிப்பில் பா.ரஞ்சித் தயாரித்த இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பது மட்டுமின்றி இந்த படம் நல்ல வசூலையும் குவித்தது என்பதும், உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளையும் குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் ’பரியேறும் பெருமாள்’ பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தலை சிறந்த படைப்பாக ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றில் ஒன்றை சரியானவற்றை தேர்வு செய்யவும் என்று கேள்வி கேட்கப்பட்டு இந்த படம் குறித்த மூன்று குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தது.
1. இப்படம் சாதியக் கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது
2. இப்படம் மிகச் சிறந்த படம் என்று வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
3. இப்படம் மாரி செல்வராஜ் செல்வராஜால் இயக்கப்பட்டு நிலம் தயாரிப்பு குழுவினரால் வெளியிடப்பட்டது
மாரி செல்வராஜின் முதல் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்’ குறித்த கேள்வி குரூப்-1 தேர்வில் இடம் பெற்றுள்ளது திரை உலகில் உள்ள அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அது மட்டுமன்றி இதே குரூப்-1 தேர்வில் தந்தை பெரியார் குறித்து 10 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.