சிவாஜிக்கு குருவாக இருந்த பழம்பெரும் காமெடி நடிகர் காலமானார்.
- IndiaGlitz, [Sunday,June 04 2017]
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சாமிக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 95.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பிரபல நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் சாமிக்கண்ணு. குறிப்பாக இயக்குனர் மகேந்திரன் இயக்கிய 'உதிரிப்பூக்கள்', முள்ளும் மலரும், மெட்டி போன்ற படங்களில் சாமிக்கண்ணுவின் நடிப்பு அபாரமாக இருக்கும். உதிரிப்பூக்கள் படத்தில் நாவிதன் வேடத்தில் நடித்த சாமிக்கண்ணு, நாயகி அஸ்வினி இறந்தவுடன் அவர் பையன் தலையை மொட்டை அடிக்க அமர்ந்திருக்கும் காட்சியில் அவருடைய நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
மேலும் சிவாஜிகணேசன் அறிமுகமான 'பராசக்தி' திரைப்படமாகும் முன்பு நாடகமாக அரங்கேறியது. அதில் சிவாஜி நடித்த குணசேகரன் கேரக்டரில் நடித்தது சாமிக்கண்ணுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திரைப்படத்தில் அந்த கேரக்டரில் சிவாஜி ஒப்பந்தமானதும் அவ்வப்போது சாமிக்கண்ணுவிடம் நடிப்பின் நுணுக்கங்களை கேட்டு அறிந்து கொண்டதாக கூறப்படுவதுண்டு.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்த சாமிக்கண்ணு கடந்த சில மாதங்களாக உடல்நலமில்லாமல் இருந்த நிலையில் நேற்று அவர் காலமானார். சாமிக்கண்ணு மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.