பாபநாசம்- திரைவிமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,July 04 2015]

கமல்ஹாசன் - மோகன்லால் இணைந்து நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் யார் சூப்பராக நடித்திருப்பார்கள் என ஒரு பட்டிமன்றம் வைத்தால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடித்திருப்பார்கள். அதேபோல ஒரே படத்தில் இல்லையென்றாலும் ஒரே கதையில் இருவரும் தங்கள் பாணியில் போட்டி போட்டு கொண்டு நடித்த படங்கள்தான் த்ரிஷ்யம் மற்றும் பாபநாசம். பாபநாசம் படம் பார்ப்பவர்கள் ஏற்கனவே த்ரிஷ்யம் படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்வார்கள்.

பாபநாசம் என்ற ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல்ஹாசனுக்கு கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் என அழகான ஒரு குடும்பம். இந்த குடும்பம் எவ்வித பிரச்சனையிலும் சிக்காமல் அழகாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் மகள் நிவேதா பள்ளியில் இருந்து கேம்ப் ஒன்றுக்கு மாணவ மாணவிகளுடன் செல்கிறார். அங்கு அவர் குளிக்கும்போது போலீஸ் அதிகாரி ஐ.ஜி. மகன் வருண், வீடியோ எடுத்து தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படியும் இல்லாவிட்டால் அந்த வீடியோவை இண்டர்நெட்டில் போட்டுவிடுவதாகவும் மிரட்டுகிறார். கவுதமியும், நிவேதாவும் வருணின் காலில் விழுந்து தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியும், வருண் கேட்காததால் எதிர்பாராமல் நடக்கும் சண்டையில் வருண் கொல்லப்படுகிறார். பின்னர் விபரீதம் அறிந்து தங்கள் வீட்டு தோட்டத்திலேயே யாருக்கும் தெரியாமல் வருணை புதைத்து விடுகின்றனர்.

சாதாரணமாக ஒரு கொலை நடந்தாலே போலீஸார் தீவிர விசாரணை செய்யும் நிலையில், ஐ.ஜி. மகேனே கொல்லப்பட்டால் விசாரணை எப்படி இருக்கும் என்பதை சொல்ல தேவையே இல்லை. வருண் காணாமல் போனதாக எண்ணும் போலீஸ், கமல் குடும்பத்தை மோப்பம் பிடித்து குடும்பத்தையே போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். இந்த வழக்கின் விசாரணையில் இருந்து கமல் குடும்பம் புத்திசாலித்தனமாக தப்பியதா? அல்லது விசாரணையில் உளறி மாட்டுகின்றார்களா? என்பது தான் கிளைமாக்ஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பு குறித்து சொல்ல தேவையே இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் மிக எளிதாக ஊதித்தள்ளும் கமல்ஹாசனுக்கு இந்த படத்தை பொருத்தவரை மோகன்லாலில் சாயல் வந்துவிடக்கூடாது என்பதில்தான் சவால் இருக்கின்றது. அந்த சவாலை அவர் நெல்லை தமிழின் மூலம் மிக அழகாக சமாளித்துள்ளார். உண்மையாகவே நெல்லையில் பரம்பரையாக வாழ்பவர்கள் கூட இவ்வளவு அழகாக நெல்லைத்தமிழ் பேசுவார்களா? என்பது சந்தேகம்தான். வீட்டு தோட்டத்தில் பிணத்தை தோண்டி எடுக்கும்போது ஏற்படும் திருப்பத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஆஷா சரத்தை ஒரு பார்வை பார்ப்பாரே கமல்.... அந்த ஒரு காட்சி போதும் அவருடைய திறமையை நிரூபிக்க...மேலும் கிளைமாக்ஸில் ஒரே ஷாட்டில் தன்னுடைய இக்கட்டான நிலையையும், குடும்பத்திற்காக தான் செய்த செயலை நியாயப்படுத்துவதையும் கமலை விட வேறு யாராது ஒருவர் இவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

ஜோதிகாவை போலவே நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் கவுதமிக்கு கமலுக்கு இணையான சவால்தரும் வேடம். முதல் பாதியில் கமலுடன் ரொமான்ஸ், இரண்டாவது பாதியில் போலீஸிடம் இருந்து தப்பிக்க அவர் படும் கஷ்டம், வாங்கும் அடிகள், கண்களில் காட்டும் பயம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கமல் ஒரு திறமையான நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது.

கமல்-கவுதமி மகள்களாக நடித்த நிவேதா, எஸ்தர் அனில், மாமனாராக டெல்லி கணேஷ், போலீஸ் அதிகாரியாக ஆஷா சரத், அவரது கணவராக ஆனந்த் மகாதேவன், மற்றும் டீக்கடை எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, கலாபவன் மணி, இளவரசு, ஸ்ரீராம் என அனைவரும் தங்களுடைய கேரக்டர்களை மிகச்சரியாக உணர்ந்து செய்துள்ளனர். யார் நடிப்பிலும் சோடை போடவில்லை என்பது படத்தின் பிளஸ்

இரண்டு பாடல்களும் சுமாராக இருந்தாலும் இந்த படத்தின் கதைக்கு முதுகெலும்பு போன்றது பின்னணி இசை என்பதை உணர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அருமையாக பின்னணி இசையை போட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய அனுபவம் இருந்ததால் வெறும் 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் ஜீத்துஜோசப். அதுவும் அவருக்கு கமல் பெரிதாக வேலை வைத்திருக்க மாட்டார் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் த்ரிஷ்யம் படத்தின் காட்சிகளை அப்படியே எடுக்காமல் ஒருசில சம்பவங்களை மாற்றி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். த்ரிஷ்யம் படத்தை ஏற்கனவே பார்த்தவர்களுக்கு முதல் பாதியின் முதல் அரைமணி நேரம் போர் அடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் படம் சரியாக மூன்று மணி நேரம் ஓடுகிறது. எடிட்டர் முதல் பாதியில் கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தியிருக்கலாம். மலையாள த்ரிஷ்யம் படத்தை ஒளிப்பதிவு செய்த அதே சுஜித் வாசுதேவ்தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர். பாபநாசம், தென்காசியின் அழகை வெகு அருமையாக காட்டியுள்ளார்.

குடும்பத்தை உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஒரு குடும்பத்தலைவர் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற நடத்தும் போராட்டத்தை கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்தலைவரும் பார்க்க வேண்டும். குடும்பத்தின் நலனுக்காக எதையும் செய்யலாம் என்ற கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை கண்டிப்பாக தற்போதைய சமுதாயத்திற்கு மிக அவசியமான ஒன்று. இந்த படம் கோடிகளை வசூல் செய்து கொட்டுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் குடியிருக்கும். படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

பாபநாசம். பல்சுவைகளின் வாசம்.

More News

விஜய்-அட்லி படத்தில் சத்யராஜ் வில்லன்?

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடக்கிய சத்யராஜ், அதன்பின்னர் ஹீரோவாக புரமோஷன் ஆனார்.......

அஜீத் வழியில் செல்லும் சிம்பு!

அஜீத்தின் வெறித்தனமான ரசிகர் சிம்பு என்பது கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அஜீத் நடித்த படங்கள் ரிலீஸாகும் தினத்தில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகராக சிம்புவும் சேர்ந்து பார்த்து ரசிப்பார்.......

மீண்டும் இணைகிறது 'ரோமியோ ஜூலியட்' படக்குழு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமணன் இயக்கிய 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம்....

மீண்டும் தேசிய விருதை பெறுவாரா பிரகாஷ்ராஜ்?

கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல மலையாள மற்றும் தமிழ்ப்பட இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது என்ற மிகப்பெரிய அந்தஸ்து ...

ஜோதிகாவின் ஐம்பதும், சூர்யாவின் முப்பந்தைந்தும்

எட்டு வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆன ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் இன்று 50வது நாளை கொண்டாடி வருகின்றது...